1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By k.n.vadivel
Last Modified: சனி, 2 மே 2015 (13:22 IST)

செய்திவாசிப்பில் சாதனை படைத்த பார்வையற்ற 5 ஆம் வகுப்பு மாணவன்

கோவையில், 5 ஆம் வகுப்பு படிக்கும் பார்வையற்ற மாணவன் , லோட்டஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசித்து  சாதனை படைத்தார்.
 
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அருகே உள்ள பாறைப்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மகன் ஸ்ரீ ராமானுஜம் (வயது 10). இவர் தொண்டாமுத்தூரில் உள்ள ஒரு பார்வையற்றோர் பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வருகிறார். 
 
இந்த நிலையில், லோட்டஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பு குறித்து  மாணவன் ராமானுஜத்துக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அந்த தொலைக்காட்சி ஊழியர்கள் கடந்த 4 மாதங்களாக சிறப்பு பயிற்சி அளித்துள்ளனர். 
 
இதனையடுத்து, மே தினம் அன்று  லோட்டஸ் தொலைக்காட்சியில் பார்வையற்ற மாணவன் ஸ்ரீ ராமானுஜம் பிரெய்லி முறையைப் பயன்படுத்தி செய்தி வாசித்தார். இந்த செய்தி வெற்றிகரமாக ஒளிபரப்பானது. 
 
இந்த அனுபவம் பற்றி மாணவன் ஸ்ரீ ராமானுஜம்  கூறுகையில், தனியார் தொலைக்காட்சி செய்திப் பிரிவு குழுவினர் தனக்கு சிறப்பாக பயிற்சி அளித்ததாகவும், ஆனாலும், முதன் முதலில் செய்தி வாசிக்கும் போது லேசாக பயம் இருந்ததாகவும், பின்பு, நம்பிக்கையோடு இருந்ததால், செய்தியை சிறப்பாக வாசிக்க முடிந்ததாவும் கருத்து தெரிவித்தார். 
 
5 ஆம் வகுப்பு படிக்கும் பார்வையற்ற மாணவன்  தொலைக்காட்சியில் செய்தி வாசித்து   சாதனை படைத்தது பலரையும் வியக்கவைத்துள்ளது.