வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 18 செப்டம்பர் 2014 (14:00 IST)

உள்ளாட்சி இடைத் தேர்தல்: நன்னடத்தை விதிகளை சரிவர கடைபிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

தமிழகத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நன்னடத்தை விதிகளை சரிவர கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தமிழகத்தில் நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 530 பதவியிடங்களுக்கு இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

ஏற்கனவே தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாநகராட்சி ஆணையர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2006–11 ஆம் ஆண்டுகளில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகளில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகள், வழிகாட்டுதல்களை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொள்கிறது.

தேர்தல் நாளிலும் வாக்கு எண்ணும் நாளிலும் உரிய விழிப்புடன் மாதிரி நன்னடத்தை விதிகளை செயல்படுத்த வேண்டும். என்றும் மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும்வரை, தேர்தல் விதிகளை மீறுவோர் மீது மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கோரி விண்ணப்பிக்கும் அனைத்து வேட்பாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். புகார் மனுக்கள் கிடைக்கப்பெற்றால் அவற்றின் மீது துரித நடவடிக்கை எடுப்பதோடு, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை உடனுக்குடன் அணுகி தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையுடனும் வெளிப்படையாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாதிரி நன்னடத்தை விதிகள் சரிவர கடைபிடிக்கப்படுவதைக் கண்காணிக்கும் தனிப்பட்ட பொறுப்பு, மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி ஆணையரையே சாரும்.

ஓட்டு போட வரும் தகுதியுள்ள வாக்காளர்கள் ஒருவர் கூட வாக்களிக்காமல் திரும்பிச் சென்று விடக் கூடாது. இதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு வழிகாட்ட அலுவலர்களை அமர்த்திக் கொள்ளவேண்டும்.“ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.