1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 26 நவம்பர் 2015 (13:41 IST)

தமிழக அரசு மீது விஜயகாந்த் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவது தொடர்பாக விஜயகாந்த் தாக்கல் செய்த மனு மீதான வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
 

 
சென்னை உயர்நீதிமன்றத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ளேன். சட்டப்பேரவையில் நடைபெறும் நிகழ்வுகள் நேரடியாக டி.வி. சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை.
 
ஆனால், பேரவை முழுவதும் கேமராக்கள் பொருத்தப்பட்டு, படம் பிடிக்கப்படுகிறது. ஆனால், அந்த வீடியோ படத்தை தணிக்கை செய்த பின்னரே, ஊடகங்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால், பேரவையில் என்ன நடக்கிறது? என்பதை பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது.
 
தமிழக சட்டப்பேரவையில் என்ன நடக்கிறது? மக்கள் பிரதிநிதிகள் என்ன கேள்விகளை கேட்டுகின்றனர்? அதற்கு அமைச்சர்கள் என்ன பதிலளிக்கின்றனர்? என்ன விவாதங்கள் நடைபெறுகின்றன? என்பதை பார்த்து தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது.
 
இவ்வாறு அவர்கள் தெரிந்து கொண்டால்தான், தேர்தலின்போது யாருக்கு வாக்களிக்கலாம்? என்பதை பொதுமக்கள் முடிவு செய்வார்கள்.
 
நாடாளுமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் தனியாக ஒரு தொலைக்காட்சியை தொடங்கி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கை 1989ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்படுகிறது.
 
எனவே, தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப தகுந்த நடவடிக்கையை எடுக்க தமிழக சட்டப்பேரவை செயலருக்கு உத்தரவிடவேண்டும்.
 
அல்லது என்னுடைய ‘கேப்டன்’டி.வி. சேனல் அல்லது இணைய தளம் மூலம் நேரடி யாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும். ஏற்கனவே, இதே கோரிக்கையுடன் ஜெகதீசன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், ஒரு மனுதாரராக நானும் இணைந்தேன்.
 
ஆனால், இந்த உயர்நீதிமன்றம் என்னுடைய மனுவை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தேன். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடும்படி கூறியது. எனவே, இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்கிறேன்” என்று கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்திய நாராயணன் ஆகியோர் முன்பு புதனன்று (நவ.25) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் வி.டி.பாலாஜி ஆஜராகி வாதிட்டார்.
 
இதையடுத்து நீதிபதிகள், இதேபோன்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகள் எங்கள் முன்பு நிலுவையில் உள்ளன.
 
அந்த வழக்குகள் எந்த நிலையில் உள்ளது? என்பதை ஆய்வு செய்த பின்னர், இந்த வழக்கையும் அந்த வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கப்படும்’என்று கூறி விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்கள்.