வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 8 ஜூலை 2015 (09:31 IST)

திருடியதை காட்டிக்கொடுத்த சிறுமியை கிணற்றில் வீசி கொன்ற மாணவி: பரபரப்பு வாக்குமூலம்

விழுப்புரம் அருகே பணம் திருடியதை காட்டிக்கொடுத்ததால் சிறுமியை கிணற்றில் வீசி கொன்ற பள்ளி மாணவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையத்தை அடுத்த வடக்கநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். 
 
இவருடைய மனைவி சந்தானலட்சுமி. இவர்களுக்கு கிஷோர் என்ற 8 வயது சிறுவனும், துர்கா  என்ற 4 வயது சிறுமியும் இருந்தனர்.
 
சிறுமி துர்கா ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவந்தாள். நேற்று முன்தினம் சிறுமி துர்கா மாயமானாள். அவளை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால் சிறுமி கிடைக்கவில்லை.
 
இந்நிலையில்,நேற்று காலை அங்குள்ள ஒரு கிணற்றில் சிறுமி துர்காவின் பிணம் மிதப்பதை, அந்த கிராம மக்கள் பார்த்துள்ளனர். தனது மகளைப் பிணமாகப் பார்த்த பெற்றோர்கள் கதறி அழுதனர்.
 
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த, கச்சிராயப்பாளையம் காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
 
இந்நிலையில், சிறுமி சாவில் சந்தேகம் இருப்பதாக அவளுடைய பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
 
இந்த விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலை சிறுமி துர்காவை தூக்கிச் சென்றது தெரியவந்தது.
 
அந்த மாணவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அந்த மாணவி சிறுமியை கிணற்றில் வீசி கொன்றதை ஒப்புக்கொண்டாள்.
 
இது குறித்து அந்த மாணவி காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
 
ஒரு வாரத்துக்கு முன்பு நான், துர்கா வீட்டில் ரூ.100 பணத்தை திருடினேன். இதை பார்த்துவிட்ட துர்கா இதுகுறித்து அவளது அம்மாவிடம் தெரிவித்து விட்டாள்.
 
உடனே சந்தானலட்சுமி என்னை ஆபாசமாக திட்டியதால், நான் அவமானப்பட்டு மனவேதனை அடைந்தேன். நேற்று முன்தினம் மாலையில் சிறுமி துர்கா வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள். அவளிடம் பேசி கடைக்கு அழைத்தேன். அவள் என்னுடன் வந்தாள்.
 
நான் பணம் திருடியதை காட்டிக்கொடுத்த ஆத்திரத்தில் துர்காவை தூக்கி கிணற்றில் வீசினேன். அவள் கூச்சலிட்டதை நான் கண்டு கொள்ளவில்லை.
 
தண்ணீரில் மூழ்கிய துர்கா மூச்சு திணறி இறந்து விட்டாள். இதையடுத்து நான் வீட்டுக்கு திரும்பி விட்டேன். இவ்வாறு அந்த மாணவி வாக்கி மூலத்தில் தெரிவித்துள்ளார்.