1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 26 நவம்பர் 2014 (15:52 IST)

சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, எரித்துக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை

கோவையில் 8 வயது சிறுமியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி எரித்துக் கொலை செய்த  இளைஞருக்கு கோவை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
 
கோவையிலுள்ள உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், உடல் கருகிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.
 
பிரேதப் பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், சிறுமியின் உறவினர் 25 வயதுடைய கோவிந்தன் என்பவர், கிராம நிர்வாக அலுவலரிடம் சிறுமியைக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டு சரணடைந்தார்.
 
அவரை கிராம நிர்வாக அலுவலர் பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் துறையினர் அவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். 
 
இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கோவிந்தன் அந்தப் பகுதியில் கேபிள் புதைக்கும் வேலை செய்து வந்ததாகவும், சம்பவத்தன்று அந்த சிறுமியை ஆசைவார்த்தைக் கூறி அருகில் உள்ள காட்டுக்கு அழைத்துச் சென்று கற்பழிக்க முயன்றதும், அப்போது அந்த சிறுமி கூச்சல் போட்டதால் அவரை எரித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது. 
 
இந்த வழக்கு விசாரணை, கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி எம்.பி.சுப்பிரமணியம், குற்றவாளி கோவிந்தனுக்கு, சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்துக்காக 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கற்பழிக்க முயற்சி செய்த குற்றத்துக்காக 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், சாட்சிகளை மறைத்த குற்றத்துக்காக 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராத தொகையும், கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
 
தருமபுரியில் ஒரு கல்லூரி மாணவியை, கோவிந்தன் பாலியல் பலாத்காரம் செய்து தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த வழக்கில் அவருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் 40 நாட்களுக்கு முன்னர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.