வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 22 பிப்ரவரி 2015 (12:34 IST)

நான் அறிந்த 7 மொழிகளில் இந்தியே சிறந்தது: சென்னையில் ஸ்மிருதி இராணி பெருமிதம்

‘நான் அறிந்த 7 மொழிகளில் இந்தி மொழியே சிறந்தது’ என்று சென்னையில் நடந்த தாய்மொழி நாள் விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பெருமிதத்துடன் கூறினார்.
 
சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் தாய்மொழி நாள் விழா நேற்று நடந்தது. விழாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி குத்துவிளக்கு ஏற்றி, “இணையவழி செம்மொழி தமிழ், அகம்- புறம்’’ என்ற புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
 
விழாவில் தென்னிந்திய மொழிகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பாடலை கல்லூரி மாணவிகள் பாடினார்கள். தொடர்ந்து சிறந்த தமிழ் அறிஞரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் கவுரவிக்கப்பட்டார்.
 
சென்னையில் உள்ள தமிழ் செம்மொழி மத்திய நிறுவனம், மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம், டெல்லியில் உள்ள ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தான் அமைப்பு சார்பில் புத்தகங்கள் வெளியிடப்பட்டது. குறிப்பாக 22 மொழிகளில் உள்ள, குழந்தைகளுக்கான 1,008 சிறுகதைகள் மொழிபெயர்ப்பு புத்தகம், ‘பொன்னியின் செல்வன்’ சமஸ்கிருதத்தில் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வெளியிட்டு, பாரதியார் பாடலின் ஒரு சில வரிகளையும் பாடினார்.
 
பின்னர் அவர் பேசியதாவது:-
 
இந்தியா பல்வேறு இனம், மொழிகளை கொண்ட நாடாக இருந்தாலும், இவை அனைத்திற்கும் இந்தியா தாய்நாடாக திகழ்கிறது. இதற்காக நாம் தற்போது தாய்மொழி நாள் விழாவை கொண்டாடி வருகிறோம். இதுபோன்ற பன்முக தன்மை கொண்ட நாடு உலகில் எங்கும் இல்லை. நம் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அனைவரும் தெரிந்து கொள்வதற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மொழிகளின் நல்ல கருத்துக்களும் பரவியிருக்க வேண்டும்.
 
அதற்காக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மொழிகளுக்கு இடையேயான இடைவெளிகளை நீக்க வேண்டும். இளைய தலைமுறையினர் குறிப்பாக பெண்கள் வருங்கால சவால்களையும் பிரச்சனைகளையும் சமாளிப்பதற்காக பல்வேறு மொழிகளை கற்று தேர்ந்தாலும், உங்களுடைய தாய்மொழியில் நீங்கள் சிறந்து விளங்க வேண்டும். நான் அறிந்த 7 மொழிகளில் இந்தி மொழி சிறந்ததாக கருதுகிறேன்.
 
இவ்வாறு அவர் பேசினார்.