வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 22 அக்டோபர் 2016 (11:36 IST)

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணிற்கு தீ வைப்பு: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை தீ வைத்து எரித்த வழக்கில், கோவை நீதிமன்றம் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
 

 
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. அவரது கணவர் குருசாமி ஏற்கனவே இறந்து விட்டார். இந்நிலையில், கடந்த 13.11.2012 அன்று இரவு, இரயில் நிலையம் அருகேயுள்ள ஒரு மரத்தடியில் லட்சுமி படுத்திருந்தார்.
 
அப்போது லட்சுமியை மேட்டுப்பாளையம் நரிப்பள்ளத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி காட்டூரான் (40) என்பவர் ஆசைக்கு இணங்க அழைத்தார். அதற்கு லட்சுமி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காட்டூரான், லட்சுமி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். 
 
இதில் பலத்த தீக்காயம் அடைந்த லட்சுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் 15.11.2012 அன்று லட்சுமி இறந்து விட்டார்.
 
இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காட்டூரானை கைது செய்தனர். அவர் மீது கொலை உள்பட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
 
இந்நிலையில், இந்த வழக்கு குறித்த தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. பெண்ணை தீ வைத்து எரித்துக் கொன்ற காட்டூரானுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.