1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 25 ஜூலை 2014 (20:01 IST)

இருவரை அடித்து கொன்ற சிறுத்தை: வனத்துறை கூண்டில் மாட்டியது

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பகுதியில் இருவரை அடித்து கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.


 

 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதையில் கடந்த மாதம் முகமது இலியாஸ் என்ற வாலிபர் வனப்பகுதிக்குள் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை அடித்து இறந்தார். இதையடுத்து கடந்த 17 ஆம் தேதி இரவு திம்பம் வனத்துறை சோதனை சாவடியில் பணியில் இருந்த கிருஷ்ணனர் என்ற வனக்காப்பாளரை அதே சிறுத்தை கொடூரமாக தாக்கி கொன்றது.
 
இதையடுத்து ஈரோடு மண்டல வனஅதிகாரி அன்வர்தீன் தலைமையில் மாவட்ட வனஅதிகாரிகள் ராஜ்குமார், பத்மா உள்ளிட்டோர் கொண்ட வனக்குழுவினர் சிறுத்தை நடமாடும் பகுதியில் 30 தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணித்தனர். பின் இந்த சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் கூண்டு வைத்தனர்.
 
ஐந்து நாட்கள் போராட்டத்திற்கு பின் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் திம்பத்தில் இருந்து தலமலை செல்லும் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் இருவரை கொன்ற சிறுத்தை சிக்கியது. பின் வனத்துறை மருத்துவர்கள் கூண்டில் சிக்கிய சிறுத்தைக்கு  மயக்க ஊசி செலுத்தி கூண்டு கம்பியில் மோதி ஏற்பட்ட காயத்திற்கு மருந்து தடவினர்.
பின்னர் இந்த சிறுத்தை வேன் மூலம் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆட்களை கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் பிடித்ததால் இப்பகுதி மலைவாழ் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.