வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 18 ஜூலை 2014 (18:19 IST)

சிறுத்தை தாக்கி வனக்காவலர் பலி: திம்பம் சோதனை சாவடியில் பரிதாபம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிறுத்தை தாக்கி சோதனை சாவடி பணியில் இருந்த வனகாவலர் பரிதாபமாக இறந்தார். இதனால் மலைகிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டது திம்பம் மலைப்பகுதி. திம்பத்தில் இருந்து தலமலை ரோட்டில் செல்லவதை கண்காணிக்க திம்பத்தில் வனத்துறை சோதனை சாவடி உள்ளது. நேற்று இரவு இந்த சோதனை சாவடியில் வனகாவலர் கிருஷ்ணன் (56) பணியில் இருந்தார்.
 
இரவு எட்டு மணிக்கு சோதனை சாவடி கதவை சாத்துவதற்காக சென்ற வனக்காவலர் கிருஷ்ணனை அங்கிருந்த சிறுத்தை ஒன்று கழுத்தை பிடித்து கடித்து குதறியது. இதனால் கிருஷ்ணனின் மரண அலரலை கேட்ட அப்பகுதி மக்கள் சத்தமிட்டனர். உடனே சிறுத்தை கிருஷ்ணன் உடலை தூக்கிக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் துப்பாக்கியுடன் வந்ததை கண்ட சிறுத்தை கிருஷ்ணன் உடலை விட்டுவிட்டு ஓடிவிட்டது.
 
சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணன் உடல் கொண்டுவரப்பட்டது. கடந்த மாதம் இதே சிறுத்தை தாளவாடியை சேர்ந்த முகமது இலியாஸ் என்பவரை திம்பம் 27வது கொண்டை ஊசி வளைவில் கடித்து கொடூரமாக கொன்றது குறிப்பிடதக்கது. சிறுத்தையின் தொடர் தாக்குதலால் மலை கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர்.