செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 31 ஜனவரி 2015 (14:55 IST)

தோல் தொழிற்சாலையின் கழிவு நீர் தொட்டி இடிந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரண நிதி

வேலூர் மாவட்டம் ராணிப் பேட்டையில் உள்ள சிப்காட் பகுதியில் தோல் தொழிற்சாலையில், கழிவு நீர் தொட்டி இடிந்து உயிரிழந்த 10 பேர் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் நிவாரண நிதி வழங்கி முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
 
ராணிப் பேட்டையில் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் இன்று காலை கழிவு நீர் தேங்கி இருந்த தொட்டி இடிந்து விழுந்தது. இதையடுத்து அந்த தொட்டியின் அருகே தூங்கிக் கொண்டிருந்த அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் உள்ளிட்ட 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
 
இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
 
இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் அமைந்துள்ள சிட்கோ தொழில் வளாகத்தில் தனியார் பராமரிப்பில் இயங்கி வந்த பொது சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று அதிகாலை கழிவுநீர் தொட்டி உடைந்து அதிலிருந்த கழிவு நீருடன் கூடிய சேறு பக்கத்திலிருந்த தனியார் தோல் கம்பெனிக்கு சொந்தமான ஷெட்டின் மீது மொத்தமாகக் கொட்டியதில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
 
இந்த துயர சம்பவத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரவிக்கு 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.