செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2016 (20:05 IST)

அதிமுக ஆட்சி வந்தவுடன் சட்டம், ஒழுங்கு மோசம் - ஜி. ராமகிருஷ்ணன்

அதிமுக ஆட்சி மீண்டும் வந்தவுடன் சட்டம் - ஒழுங்கு மோசமாகியுள்ளது. கூலிக்கு கொலை செய்வோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து விருதுநகரில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசிய ஜி. ராமகிருஷ்ணன், "கடந்த 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்த போது, கச்சா எண்ணெய் விலை 109 டாலராக இருந்தது. அப்போது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.75 க்கு விற்கப்பட்டது. தற்போது, கச்சா எண்ணெய் விலை பாதியாக குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல் விலை ரூ.68 ஆக உள்ளது.
 
இதற்கு காரணம் வரிகளை மோடி அரசு உயர்த்தி வருவதுதான். இதனால், அரிசி, பருப்பு, காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. இந்தியாவில் ஒரு வருடத்திற்கு ஒரு கோடியே 30 லட்சம் பேர் படித்து முடித்து வேலைக்காக வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு நிரந்தரமான பணி கிடைப்பதில்லை. அமைப்பு சாரா பணிகளே கிடைக்கின்றன.
 
தமிழக்தில் 2011 வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 73 லட்சம் பேர் பதிவு செய்து இருந்தனர். தற்போது, அந்த எண்ணிக்கை 90 லட்சமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்க எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
 
தமிழகத்தில் கல்வியை தனியார் மயமாக்குவதால், அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன. அதிமுக ஆட்சி மீண்டும் வந்தவுடன் சட்டம் - ஒழுங்கு மோசமாகியுள்ளது. கூலிக்கு கொலை செய்வோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது” என்று கூறியுள்ளார்.