வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (16:29 IST)

என்னம்மா இப்படி பண்றீங்களேமா பாகம் - 2 ; விஜய் டிவி மீது லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டம்

என்னம்மா இப்படி பண்றீங்களேமா பாகம் - 2 ஒளிப்பரப்புவது குறித்து விஜய் டிவி மீது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது கடுமையான எதிர்ப்பை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
 

 
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ’சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.
 
அதேபோல் விஜய் டிவியில் ‘அது இது எது’ என்ற நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் ’சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் சொல்கின்ற என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்கிற வாக்கியத்தை கிண்டல் செய்து ஒளிபரப்பியது.
 
இதன் பின்னர், அந்த நிகழ்ச்சியும், ’என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ என்ற வார்த்தையும் தமிழகம் முழுவதும் பிரபலம் அடைந்தது. 
 
இந்நிலையில், என்னம்மா இப்படி பண்றீங்களேமா பாகம் - 2 என்கிற ஒரு விளம்பரம் சென்ற வாரம் விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனாலும், அந்த நிகழ்ச்சி வழக்கம் போல ஒளிபரப்பானது.
 
இதனையடுத்து விஜய் டிவிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை கீழே:
 
”கிண்டல் என்பது நல்லவிதத்தில் இருக்கவேண்டும். மிகவும் அதீதமாகப் போகும்போது சேதத்தையும் மனவருத்தத்தையும் உருவாக்குகிறது. விஜய் டிவி எந்தவொரு நெறிமுறைகளையும் பின்பற்றவில்லை.”
 
”விஜய் டிவியிடம் கேட்கிறேன். என்னம்மா இப்படி பண்றீங்களேமா-வின் இரண்டாம் பாகத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தபோதும் ஏன் நிகழ்ச்சியை நிறுத்தவில்லை?”
 
”இதற்கு விஜய் டிவி பதில் சொல்லட்டும். என் பணியை நீங்கள் பாராட்டவில்லை என்றால் ஏன் உங்கள் நிகழ்சிகளுக்கு என்னை விருந்தினராக அழைத்தீர்கள்? சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நீங்கள் வெறுக்கிறீர்கள், அதன்மீது மரியாதை இல்லை என்றால் ஏன் அவர்களின் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தார்கள்? நம்ம வீட்டுக் கல்யாணம் நிகழ்ச்சிக்கு இருமுறை அழைத்தது ஏன்?”
 
”முதல் பாகத்தினால் நான் மிகவும் கோபமடைந்தேன். விஜய் டிவியின் தலைவரிடம் இதுபற்றி விவாதித்தேன். அதே தலைப்பில், அதன் புகழை முன்வைத்து நல்ல நோக்கத்துக்காக ஒரு நிகழ்ச்சி செய்ய சொன்னேன்.
 
ஆனால் மீண்டும் அதேபோன்ற ஒரு கிண்டலை செய்து கேவலப்படுத்திவிட்டார்கள். எனக்கும் மற்றவர்களும் அதீதமாகப் படுகிறது. என் உணர்வுகளை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளவே இதைத் தெரிவிக்கிறேன்.”
 
”இந்தத் துறைக்கு வரும்போது எதையும் கொண்டு வரவில்லை. அதனால் வெறுங்கையுடன் செல்லவும் தயங்க மாட்டேன். கடவுளுக்கும் என் பெற்றோருக்குமே தலை வணங்குவேன். மற்றவர்களுக்கு அல்ல”
 
”மக்கள் என்ன சொல்வார்கள் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை, நான் சரி என்று எதை நம்புகிறேனோ அதை நான் செய்வேன்... மேலும் எனது குடும்பம் என்னை குற்றம் சாட்டவில்லை!” என்று கூறியுள்ளார்.