1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (12:06 IST)

குற்றாலீஸ்வரனே இந்தியாவை புறக்கணித்தார் : சமூக வலைத்தளத்தில் பதிலடி

பிரேசிலில் நடைபெற்றும் வரும் 2016ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில், இந்தியா தங்கம் பதக்கம் வெல்லவில்லை என்று சமூக வலைத்தளங்களில், கோபங்களும், கிண்டல்களும் அனல் பறக்கிறது. அது தொடர்பாக ஏகப்பட்ட மீம்ஸ்கள் உலா வந்து கொண்டிருக்கிறது.


 

 
இந்நிலையில், 13 வயதில் ஆங்கில கால்வாயை நீச்சல் மூலம் கடந்த, தமிழகத்தை சேர்ந்த நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் பற்றி, முத்து ராமலிங்கம் சுப்ரமணியன் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் “தங்க மீன்கள்” என்ற தலைப்பில், அவரின் புகைப்படத்தை வெளியிட்டு,  ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்.
 
அதில், மேற்கொண்டு சாதனை படைக்க குற்றாலீஸ்வரனுக்கு  இந்திய அரசு உதவ முன்வரவில்லை என்றும், அதனால் ஏமாற்றம் அடைந்த அவர் கணினி துறைக்கு தாவி தற்போது அமெரிக்காவில் பணி புரிந்து வருகிறார் என்றும், அவரை போல் பலர் விளையாட்டு துறைகளில் சாதிக்க முடியாமல் வேறு வேலை பார்த்து வருகின்றனர் என்றும் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.
 
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா குற்றாளீஸ்வரனை புறக்கணிக்கவில்லை.. அவர்தான் இந்தியாவை புறக்கணித்தார் என்கிற தோனியில் மறம்.ஆர் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
 
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :
 
“ஒலிம்பிக்ல மெடல் வாங்க நம்ம நாடு திணறிட்டு இருக்கும் போது குற்றாலீஸ்வரன் மாதிரி ஒரு திறமையாளர் எப்படி புறக்கணிக்கப்பட்டார்னு ஒரு போஸ்ட் பரபரப்பா ஷேர் ஆகிட்டு இருக்கு.
 
என்னோட கேள்வி என்னன்னா, அவர் புறக்கணிக்கப்பட்டாரா, இல்லை புறக்கணித்தாரா?சிறு வயதில் மாவட்ட அளவிலான போட்டில கலந்துக்கிட்டவர், அதுக்கப்புறம் மாநில அளவிலான போட்டிகளிலோ, தேசிய அளவிலான போட்டிகளிலோ கலந்துக்கிட்ட மாதிரியே தெரியலையே? அவர் நீச்சல் அடிச்சது எல்லாம் கடல்லதான். 1994-ல ஒரே வருடத்தில் ஆறு கடல் கால்வாய்களை நீந்தி கடந்திருக்கார். இது ஒரு கின்னஸ் சாதனை. இதை அங்கீகரிச்சு அவருக்கு அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டிருக்கு. அப்புறம் ஒரு முக்கியமான விசயம் இந்த ஆறு முயற்சிகளுமே தமிழக அரசால் ஸ்பான்சர் செய்யப்பட்டது.
 
ஆனால் அவருடைய இந்த முயற்சிகள் எல்லாமே ஒரு தனிநபர் சாதனையாத்தான் இருந்துச்சு, தேசம் சார்பாக போட்டியிடும் விளையாட்டுப் போட்டி இல்லை. சாதாரணமா ஒரு விளையாட்டு வீரர் சிறப்பா விளையாடுறார்னா என்ன நடக்கும்? பள்ளி அளவுல இருந்து மாவட்ட அளவு, பிராந்திய அளவு, மாநில அளவு தேசிய அளவிலான போட்டிகள்னு படிப்படியா முன்னேறுவார். தேசிய அளவில் இருக்கும் போது சார்க் விளையாட்டு போட்டி, காமன்வெல்த் கேம்ஸ், ஏசியன் கேம்ஸ், ஒலிம்பிக்ஸ்னு எல்லாத்திலேயும் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
 
இந்த மாதிரி எல்லாம் விளையாடாம, தன்னோட தனிப்பட்ட முயற்சிகள் மூலமா கடல் பகுதிகள்ல நீந்தி சாதனை படைச்சிருக்கார். அதற்கு அரசும் ஆரம்பத்துல முழுமையா ஸ்பான்சர் பண்ணி இருக்கு. ஆனா தொடர்ந்து அவர் அதே போல கேட்கவும் கைய விரிச்சிட்டாங்க. இந்த மாதிரி முயற்சிகளுக்கு தனியார் ஸ்பான்சர் செய்யலைன்னு குறை சொல்லவும் முடியாது, அவங்க ஒன்று இரண்டு தடவை பண்ணலாம் ஆனா தொடர்ந்து பண்ணனுமா இருந்து அதுக்கு அவங்களுக்கு ஆதாயம் இருக்கனும். இப்போ இந்தியா சார்பா ஒலிம்பிக்ல விளையாடிட்டு இருக்கவங்கள்லாம் யார் ஸ்பான்சர்ல இருக்காங்க, கொஞ்சம் யோசிச்சு பாருங்க?
 
இப்போ சொல்லுங்க. தமிழக அரசு ஆதரவோட ஒரே ஆண்டுல ஆறு கடல் சந்திகளை நீந்தி கின்னஸ் சாதனை படைத்தவருக்கு, அர்ஜுனா விருது வாங்கினவருக்கு, மாநில அளவிலோ இல்ல தேசிய அளவிலோ விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கும்னு சொன்னா நம்ப முடியுதா? சாதனைகள் மூலமாக அந்த காலகட்டத்தில் மீடியாவில் பிரபலமாக இருந்தவர். அவருக்கே வாய்ப்பில்லைன்னு சொன்னா எப்படி? வீரர்கள் தேர்வில் அரசியல் இல்லைனு சொல்லவில்லை. 
 
ஆனால் சர்வதேச திறமை பெற்றவர், அதிலும் அர்ஜுனா விருது வேறு வாங்கி இருக்கும் குற்றாலீஸ்வரன் போன்றவர்கள் அப்பட்டமாக புறக்கணிக்கப்பட்டிருப்பார்கள் என்பது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. முயன்றிருந்தால் நிச்சயம் ஏசியன் கேம்ஸ், ஒலிம்பிக்சில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கும், ஆனால் அவர் அதற்கு முயலவே இல்லை என்றுதான் தோன்றுகிறது.
 
இப்போ ஒலிம்பிக்ல விளையாடுறவங்க முகங்களை பாருங்க. பலர் ஏழ்மையான, எளிமையான பின்னணில இருந்து வந்தவங்கன்னு பார்த்த உடனே புரியும். போராடி மேல வந்திருக்காங்க. ஆனா குற்றாலீசுவரனை பத்தி சொல்லப்படுவது எதுவும் அப்படி தெரியல. மாநில அளவிலோ, தேசிய அளவிலோ விளையாட தகுதி தேர்வுல கலந்துக்கிட்டு தகுதி அடைந்தும் புறக்கணிக்கப்பட்டாரா இல்லை அவர் தேசிய அளவுல விளையாட முயற்சிக்கவே இல்லையா? ஸ்பான்சர் கிடைக்கவில்லை என்று சொல்லுவதெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று. 
 
மாவட்ட அளவில் இருந்து முன்னேறி மாநில அளவை தொட்டிருந்தாலே அப்படியே மேலே வந்திருக்கலாம். ஆனால் அவருக்கு சர்வதேச தனிநபர் சாதனைகளில் மட்டுமே விருப்பமாக இருந்திருக்கிறது. எனவே அதற்கு தனியாக கார்ப்பரேட் ஸ்பான்சர் தேவைப்பட்டிருக்கிறது. அது தொடர்ந்து கிடைக்கவில்லை என்றதும் 10-ம் வகுப்பை தாண்டி படிப்பில் கவனம் செலுத்தி கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து இப்போது அமெரிக்காவிலும் செட்டில் ஆகிவிட்டார். ஒருவகையில் இது சுயநலம்தான். ஆனா அது அவர் இஷ்டம்....”
 
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.