வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: சனி, 13 செப்டம்பர் 2014 (13:22 IST)

கும்பகோணம் தீ விபத்து: 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு

கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி தீ விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 11 பேர், கீழ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழக அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
 
2004ஆம் ஆண்டு சூலை மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில், மாவட்ட அமர்வு நீதிமன்றம், 2014 சூலை 30ஆம் தேதி தீர்ப்பளித்தது. 10 பேர் குற்றவாளிகள் என்றும் 11 பேர்களை விடுவிப்பதாகவும் நீதிமன்றம் கூறியது. விடுவிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் ஆசிரியர்கள்.
 
தீப்பற்றக் காரணமாக இருந்த சத்துணவுக் கூடத்தின் அருகே மூன்று வகுப்பறைகள் இருந்ததால், குழந்தைகள் பாதுகாப்பாகக் கல்வி பயில்வதை உறுதிப்படுத்த மூன்று ஆசிரியர்கள் தவறிவிட்டனர் என்றும், எனவே அவர்களை விடுவித்தது தவறு என்றும் கோரி, தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த மனுவை நீதிபதிகள் மணிக்குமார், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.