வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (17:06 IST)

புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ,வாக நீடிக்கத் தடை கோரிய வழக்கு தள்ளுபடி

புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, எம்.எல்.ஏ,வாக நீடிக்கத் தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
 
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
 
மனுவில் கூறியிருந்தாவது,
 
ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது, தனது சாதி குறித்து தவறான தகவலை தெரிவித்திருந்தார். இது குறித்து அப்போது, தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனால் எனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. பிறந்த இடத்தை அடிப்படையாகக் கொண்டுதான் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்றுதான் அரசு ஆணை உள்ளது. ஆனால் உடுமலைப்பேட்டை தாலுகாவில் பிறந்த கிருஷ்ணசாமிக்கு கோயம்புத்தூர் தெற்கு தாசில்தார் சாதி சான்றிதழ் வழங்கியுள்ளார்.
 
எனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ள சாதிச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். அதன் மீது இறுதி முடிவு எடுக்கும் வரை எம்.எல்.ஏ.வாக செயல்பட டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
 
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தடை கேட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.