வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2015 (16:16 IST)

கருணாநிதியை சந்தித்தார் பாடகர் கோவன்

மதுவிலக்கு பற்றி பாடல் பாடி சமீபத்தில் கைது செய்யப்பட்ட கோவன் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.


 
 
மூடு டாஸ்மாக்கை மூடு என்ற தொடங்கும் பாடலை பாடி மக்களிடையே பிரபலமானவர், மக்கள் கலை இலக்கிய பாடகர் கோவன். “ஊருக்கொரு சாராயம்! தள்ளாடுது தமிழகம்” என்று தொடங்கிய பாடலை எழுதி பாடிய இவரை, தமிழக அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது. 
 
அதன் பின் ஜாமினில் வெளியே வந்தார். என்மீது தமிழக அரசு எத்தனை அடுக்குமுறை காட்டினாலும், மதுவிலக்கு பற்றிய எனது போராட்டம் தொடரும் என்று கூறியிருந்தார்.    
 
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை இன்று கோவன் சந்தித்தார். அதன் பின் நிருபர்களிடம் பேசிய போது:
 
மூடு டாஸ்மாக்கை என்று பாடியதற்காக தேச துரோக வழக்கில் அரசு என்னை கைது செய்தது. நான் கோர்ட்டில் வாதாடி ஜாமீனில் வெளிவந்திருக்கிறேன்.
 
என்னை பழி வாங்கும் கண்ணோட்டத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. டாஸ்மாக் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும் என்பதே என் ஆசை. மாணவிகள் வகுப்பறையில் மது குடிப்பது மதுவின் தீமையால் ஏற்பட்ட உச்சக்கட்டம்.
 
எனவே, மக்களிடம் மது விலக்கின் அவசியத்தையும், மது குடிக்க கூடாது என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் ஒரு பிரசார இயக்கத்தை வழி நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக அடுத்த மாதம் சென்னையில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
 
அந்த கூட்டத்துக்கு மது விலக்கை ஆதரிக்கும் அனைத்துக் அரசியல் கட்சிகளையும் அழைக்க உள்ளோம். அந்த வகையில் இன்று திமு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளோம்” என்று கூறினார். 
 
அதிமுக, பாஜக தவிர மற்ற எல்லா கட்சி தலைவர்களுக்கும் கோவன் அழைப்பு விடுப்பார் என்று தெரிகிறது