வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 29 ஜனவரி 2015 (13:02 IST)

அமெரிக்காவில் இருந்து ஆன்லைனில் துப்பாக்கி வாங்கிய வாலிபர் கைது

அமெரிக்காவில் இருந்து ஆன்லைன் மூலமாக கைத்துப்பாக்கி வாங்கிய கோவை வாலிபர், சென்னை விமான நிறுவன பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையால் சிக்கினார். இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அமெரிக்காவில் இருந்து கோவை வடவள்ளியில் உள்ள சூரியதேவன் (23) என்பவருக்கு துரித பார்சலில், விளையாட்டு பொருட்கள் கொண்ட ஒரு பார்சல் சென்னை தபால்துறைக்கு கடந்த 21ஆம் தேதி வந்துள்ளது. இந்த பார்சலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் அனுப்புவதற்காக தனியார் விமான நிறுவனத்தின் பார்சல் பிரிவு உள்ள ஆலந்தூருக்கு தபால் துறை சார்பில் கொண்டு வரப்பட்டது.
 
அந்த பார்சலை விமான நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள் ‘ஸ்கேனிங்’ செய்து பார்த்துள்ளனர். அப்போது அதில் விளையாட்டு பொருட்களுக்கு பதிலாக துப்பாக்கி இருப்பதை கண்டுபிடித்தனர். விமானத்தில் துப்பாக்கியை அனுப்ப முடியாது என்றனர். உடனே தபால் துறையினர் தபாலில் இருந்த முகவரியில் உள்ள சூரியதேவனிடம் விசாரித்தபோது அது துப்பாக்கி வடிவில் இருக்கும் விளையாட்டு பொருள் என கூறியதாக தெரிகிறது.
 
இருப்பினும் சந்தேகம் அடைந்த தபால் துறையினர் விமான நிலைய காவல்துறையினருக்கு தகவல் தந்தனர். சென்னை விமான நிலைய காவல்துறையினர் துப்பாக்கியை கைப்பற்றி அது உண்மையிலேயே துப்பாக்கி தானா? இல்லை விளையாட்டு பொருளா? என்பதை கண்டறிய மயிலாப்பூரில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
 
ஆய்வின் முடிவில் அது 9 எம்.எம். அளவு கொண்ட தோட்டாக்கள் பயன்படுத்தப்படும் கைத்துப்பாக்கி என்பது தெரியவந்தது. மேலும், அமெரிக்காவில் இருந்து துப்பாக்கி பார்சலில் வந்தது தெரியவந்தது.
 
இதையடுத்து விமான நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சூரியதேவனை கைது செய்தனர். விசாரணையில் அவர் டிப்ளமோ படித்து முடித்து விட்டு தந்தையுடன் தங்க நகை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் ஆன்லைனில் ரூ.10 ஆயிரத்திற்கு அந்த துப்பாக்கியை கடந்த 45 நாட்களுக்கு முன்பு வாங்கி உள்ளார். இதையடுத்து இந்த துப்பாக்கி தபாலில் அனுப்பப்பட்டு உள்ளது என்பது தெரியவந்தது.
 
இதையடுத்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சூரியதேவனை, காவலில் வைக்க நீதிபதி வித்யா உத்தரவிட்டதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.