1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 6 மே 2015 (11:35 IST)

கூத்தாண்டவர் கோவில் விழாவை புறக்கணித்த அமைச்சர்கள்: பரபரப்பு தகவல்கள்

விழுப்புரம், அருள்மிகு கூத்தாண்டவர் கோவில் விழாவில், திமுகவைச் சேர்ந்த எம்பி திருச்சி சிவா, கலந்து கொண்டதால், அதிமுகவைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் புறக்கணித்தாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
விழுப்புரம் மாவட்டம், அருள்மிகு கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டூம் சித்திரை திருவிழா நடைபெறும்.
 
இந்த விழாவில், தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான திருநங்கையர் ஆர்வமுடன் வந்து பங்குகொள்வர்.
 
திருநங்கைகளை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மிஸ் கூவாகம்  போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றது. 
 
இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி அன்று, கலை விழாவும், அதன் பிறகு மிஸ்கூவாகம் அழகிப் போட்டியும் நடைபெற்றது.
 
இந்த கலைவிழாவில், சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதி, ஊரக தொழில் துறை அமைச்சர் மோகன் ஆகியோர் கலந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி அமைச்சர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை.


 

 
ஆனால், விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் போட்டியில், மாவட்ட ஆட்சித்லைவர் சம்பத், எஸ்.பி. நரேந்திரன் நாயர் ஆகியோர் கலந்து கொள்வர்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர்களும் இந்த விழாவை புறக்கணித்தனர்.

மேலும், மிஸ் கூவாகம் போட்டி திமுகவுக்கு சொந்தமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது, மேலும் ராஜ்யசபாவில், திருநங்கையருக்கான தனிநபர் மசோதாவை திமுகவைச் சேர்ந்த, திருச்சி சிவா தாக்கல் செய்தார். இதற்காக, விழுப்புரத்தில் நடந்த விழாவில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
 
இது போன்ற காரணங்களால் தான், அதிமுக அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகின்றது.
 
ஆனால், இது போன்ற அரசியல் சூழ்நிலைகளை கண்டு கொள்ளாமல், கூத்தாண்டவர் கோவில் திருவிழா வழக்கம் போல் திருநங்கைகள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடப்பட்டது.


 


விழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலிக் கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.