வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 6 ஜனவரி 2016 (11:18 IST)

பின்னலாடை தொழிலை ஊக்குவிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

பின்னலாடை தொழிலை மேம்படுத்த தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.


 

 
இது குறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்த பெரிய தொழில்களில் ஒன்று பின்னலாடை உற்பத்தித் தொழில். தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய மற்றும் முதன்மையான நகரம் திருப்பூர். 
 
ஏனென்றால் திருப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் தான் பின்னலாடைகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டது.
 
திருப்பூரில் மட்டும் தற்போது சுமார் 10 ஆயிரம் பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் சுமார் 7.5 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள்.
 
இந்தியாவில் சுமார் 90 சதவிகித பருத்தி பின்னலாடை திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.
 
இந்திய அரசுக்கு ஆடை ஏற்றுமதி மூலம் கிடைத்த மொத்த வருவாயில் நான்கில் ஒரு பங்கு திருப்பூர் மூலமாக கிடைத்தது. இதற்கு முக்கிய காரணம் இப்பகுதி வாழ் தொழிலாளர்களின் கடின உழைப்பு.
 
ஆனால் தற்காலங்களில் மின்வெட்டு, நூல் விலை உயர்வு, பஞ்சு தட்டுப்பாடு, வேலை நேரம் அதிகம், நிரந்தரமற்ற வேலை, போதிய தொழிலாளர்கள் கிடைக்காமல் இருப்பது, வேலை இழப்பு, கடன் தொல்லைகள் போன்ற பல்வேறு காரணங்களால் பின்னலாடை உற்பத்தியானது திருப்பூர் பகுதிகளில் வீழ்ச்சி அடைந்து வருகிறது.
 
இதனால் இத்தொழிலை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் நம்பிக்கையை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
 
மேலும் அவர்கள் இத்தொழிலை விட்டுவிட்டு மாற்றுத் தொழிலுக்காக பிற பகுதிகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
 
ஆரம்ப காலத்தில் திருப்பூர் நகரம் ஆடை உற்பத்தியில் எந்த அளவிற்கு முன்னோடியாக இருந்ததோ அதே போல் மீண்டும் அந்நகரம் ஆடை உற்பத்தியில் முதல் வரிசையில் இருப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு செயல்திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும். 
 
எனவே இதற்கான துறையின் மேம்பாட்டில் அரசு தனிக்கவனம் செலுத்திட வேண்டும். எனவே பின்னலாடை உற்பத்திக்கு தொழிலாளர்கள் ஆர்வத்தோடு வேலைக்கு வருவதற்கு அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு, வேலை நேரம், பணப்பயன் போன்ற சலுகைகளை ஏற்படுத்தி தந்து, உற்பத்தியைப் பெருக்க அரசு முன்வர வேண்டும்.
 
மேலும் இதற்கென தனிவாரியம் உடனடியாக அமைத்து, பின்னலாடை உற்பத்தி தொழிலை ஊக்கப்படுத்தி, தொழிலாளர்கள் நலன் காத்திட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.