1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 6 மார்ச் 2015 (17:46 IST)

தியாகு கோரிக்கையை நிராகரித்துள்ளார், போராட்டம் தொடரும்: கவிஞர் தாமரை

தனது கணவர் தியாகு, என் கோரிக்கையை நிராகரித்துள்ளார் இதனால் தனது போராட்டம் தொடரும என்று, 8ஆவது நாளாக தனது கணவர் தியாகுவிற்கு எதிராக, தெருவில் போராட்டம் நடத்திவரும் கவிஞர் தாமரை தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


 

 
இது குறித்து முகநூல் பக்கத்தில் கவிஞர் தாமரை குறிப்பிட்டிருப்பதாவது:-
 
"போராட்டம் தொடர்கிறது. என் போராட்டத்தில் இன்று (6.3.15) எட்டாவது நாள். நடுநிலையாளர்கள் மூலம் தியாகு கடிதம் கொடுத்திருந்தார். அதை அவர் முகநூல் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார். 
 
நான் நேற்று அதற்கு பதில் அனுப்பி விட்டேன். இன்று மாலை 6 மணி வரை அவருக்கு யோசித்து முடிவு சொல்ல நேரம் இருக்கிறது. காத்திருப்போம்.
போராட்டத்தின் முடிவு இன்று தெரிந்து விடும். அதுவரை அதே வள்ளுவர் கோட்டம். அதே தெருவோரம்." இவ்வாறு கவிஞர் தாமரை தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
 
அதைத் தொடர்ந்து, தனது கணவர் தியாகுவிடம் இருந்து பதில் வந்துள்ளதைக் குறிப்பிட்டு, அந்தப் பதில் அறிக்கையை இணைத்துள்ளார். 
 
அவரது (தியாகுவின்) 'அறிக்கை'.
 
"ஓவியர் வீர சந்தனம் அவர்களுக்கும் வழக்கறிஞர் அருள்மொழி அவர்களுக்கும். தியாகு எழுதுகிறேன்.
 
வணக்கம். என் 3/3 கடிதத்துக்கு கவிஞர் தாமரை 5/3 நாளிட்டு எழுதிய பதில் கண்டேன்.
 
எந்நிலையிலும் மீண்டும் சேர்ந்து வாழ்வதில்லை, வெளிப்படையாகவோ கமுக்கமாகவோ மன்னிப்புக் கேட்டோ கேட்காமலோ வீடு திரும்புவதில்லை என்பதில் உறுதியாக உள்ளேன். மீண்டும் சேர்ந்து வாழ்வது நோக்கமில்லை என்பதைக் கவிஞரும் மொழிந்தும் மொழியாமலும் உறுதி செய்து விட்டார்கள், நன்று.
 
என் கடந்த இருபதாண்டு வாழ்க்கை குறித்து நடுநிலையான விசாரணை என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளேன். சொன்னாலும் சொல்லா விட்டாலும் இது எங்கள் இருவர் வாழ்க்கையையும் ஆய்வு செய்வதாகவே இருக்கும் என்பது அவர்களுக்குப் புரியாமலிருக்காது.
 
கவிஞரும் சமரனும் இப்படித் தங்களை வருத்திக் கொண்டு போராடுவது எனக்கும் மனத் துன்பம்தான். என் வலி மற்றவர்களிடம் காட்டிக் கொள்வதற்கானதன்று. யாரையும் நம்பச் செய்வதற்கானதும் அன்று.
என்னால் இயன்றவரை கவிஞரின் மனம் விரும்பும் தீர்வைத் தருவதுதான் எனக்கும் விருப்பமான ஒன்று:
 
1)  'வீட்டை விட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி' என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். அந்த அளவுக்கு என்ன நடந்தது என்பதையும், வெளியேறி வந்த ஐந்தாம் நாளே நான் அனுப்பிய மின் அஞ்சலுக்கு (28/11/2014) அவர்களின் மறுமொழி என்ன என்பது பற்றியும் விசாரணையின் முதற்பொருளாகவே ஆய்வு செய்யலாம்.
 
என் செயலினால் அவர்களுக்கு ஏற்படும் துன்பத்தை உணர்ந்தே இருந்தேன் என்பதை என் 28/11 கடிதமே காட்டும். இந்தக் கடிதத்தை மட்டும் அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. (எனவே இப்போதும் அதனை இணைப்பாகச் சேர்த்துள்ளேன்.) போகட்டும், தாயும் பிள்ளையும் கடந்த ஏழு நாட்களாக படும் அல்லல் முடிவுக்கு வர வேண்டும் என்பது எனக்கும் முகாமையானது. எனவே என் வருத்தத்தை வெளிப்படையாகவே ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்து விடுகிறேன்.
 
இதையும் விசாரணைக் கோரிக்கையை நான் ஏற்றுக் கொண்டிருப்பதையும் கருதி அவர்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம். அவர்கள் இடைக்காலத்தில் அறிக்கைகளிலும் கடிதங்களிலும் ஊடகச் செவ்விகளிலும் என்னைப் பற்றியும் இயக்கம் பற்றியும் தமிழ்த் தேசியம் பற்றியும் நடத்தியுள்ள 'அர்ச்சனைகளை' ஒதுக்கித் தள்ளி விட்டு நேரில் வந்து வேண்டுகோள் விடுப்பது பொருத்தமாக இருக்காது.
 
இருவர் மனத்திலும் மண்டிக் கிடக்கும் கசப்பை மறைத்து விட்டு ஊடகங்களுக்காக முகநகுவதில் எனக்கு உடன்பாடில்லை. அவர்களுக்கும் இருக்க முடியாது. எனவே அவர்கள் ஏற்றுக் கொண்டால் உடனே வெளிப்படையாக உரிய முறையில் வருத்தம் தெரிவித்து வேண்டுகோள் விடுக்க நான் அணியமாய் உள்ளேன்.
 
2) விசாரணை தொடர்பான நடைமுறைச் சிக்கல்களில் நீங்கள் என்ன முடிவெடுத்தாலும்சரி. நீங்கள் இருவரும் எங்கள் இருவரின் தனித்தனிக் கருத்துக்களைப் பெற்று ஒரு வாரத்துக்குள் ஒரு குழுவை அமைத்து விடலாம். விசாரணையின் வரையறை, எங்கே எப்படி என்பதையெல்லாம் நீங்களோ அந்தக் குழுவோ முடிவு செய்யலாம். இது தொடர்பாக எழுத்துவடிவிலான உறுதி கேட்டுள்ளார்கள். நீங்ககள்தான் முடிவு சொல்ல வேண்டும்.
 
3) விசாரணை முடிவுகளை/விவரங்களை வெளிப்படையாக அறிவிப்பது தொடர்பான முடிவையும் விசாரணைக் குழுவிடமே விட்டு விடலாம் என்பது என் கருத்து. ஆனால் இதை நான் வலியுறுத்தவில்லை.
 
4) எஞ்சிய பொருட்பாடுகள் இருப்பின் விசாரணைக் குழுவின் பொறுப்பில் விட்டு விடலாம்.
 
5) இந்த ஏற்பாட்டுக்கு அவர்கள் இசைவு தெரிவித்தால், ஒரு மணி நேரத்தில் என் வேண்டுகோள் அறிக்கை சமூக வலைத்தளங்கள் வழியாகவும், ஊடகங்கள் வழியாகவும் வெளியிடப்படும். ஊடகர்களை நேரில் அழைத்துச் சொல்லவும் செய்யலாம்.
 
6) என் வேண்டுகோள் அறிக்கையை வரைந்து நீங்களும் அவர்களும் பார்த்துச் சொன்ன பின் வெளியிடவும் அணியமாய் உள்ளேன்.
 
தியாகு, சென்னை, 06.03.2015." இவ்வாறு தியாகு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
 
இது குறித்து முகநூர் பக்கத்தில் கவிஞர் தாமரை குறிப்பிட்டிருப்பதாவது:-
 
"தியாகுவின் பதில் வந்துவிட்டது. என் கோரிக்கையை நிராகரித்துள்ளார். நல்லது. இனி விரைவில் என் அடுத்த நகர்வை அறிவிக்கிறேன்." என்று கூறியுள்ளார்.
 
கவிஞர் தாமரை தனக்கு சட்ட ரீதியிலான தீர்வு தேவியில்லை என்றும் சமூக ரீதியிலான தீர்வுதான் தேவை என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.