வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2016 (13:25 IST)

பழம் கனிந்து கொண்டிருக்கிறது - தேமுதிகவுடன் கூட்டணி குறித்து கருணாநிதி பதில்

பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை என்று தேமுதிகவுடனான கூட்டணி குறித்து திமுக தலைவர் கருணாநிதி என்று கூறியுள்ளார்.
 

 
சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடன் தொடர்ந்து 12 நாட்கள் நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணல் இன்றுடன் நிறைவடைந்தது.
 
பின்னர், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, “22-2-2016 முதல் 27-2-2016 மற்றும் 2-3-2016 முதல் 8-3-2016 வரை மொத்தம் 12 நாட்கள் நேர்காணல் நடத்தப்பட்டது.
 
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கழகத்தின் சார்பில் விண்ணப்பித்திருக்கும் 4,362 பேரும்; புதுவை - காரைக்காலில் உள்ள 30 தொகுதிகளுக்கும் விண்ணப்பித்திருக்கும் 71 பேரும் ஆக மொத்தம் 4,433 பேர் நேர்காணலில் கலந்து கொண்டார்கள்.
 
விண்ணப்பப் படிவங்கள் மொத்தம் 6,366 விற்பனை ஆன வகையில் 63 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாயும்; 5,661 பேர் விண்ணப்பக் கட்டணமாக செலுத்திய வகையில் மொத்தம் 12 கோடியே 37 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் தலைமைக் கழகத்திற்கு செலுத்தப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
 
அதன் பின்னர் செய்தியாளர்கள், திமுக - தேமுதிக கூட்டணி முடிவாகிவிட்டதா? என்று கேட்டதற்கு, ”பழம் கனிந்து கொண்டிருக்கிறது. பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
 
திமுக கூட்டணியில் தேமுதிக சேரும் என்று நம்புகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியபோது, ’நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது’ என்று கருணாநிதி கூறினார்.
 
மேலும், கூட்டணியில் சேர வேறு எந்த கட்சிக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிவித்த அவர், திமுகவின் தேர்தல் அறிக்கை, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.