வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2017 (11:17 IST)

மீன் பிடிக்க சீன என்ஜின் ; அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக காசிமேடு மீனவர்கள் போராட்டம்

கடலில் மீன்பிடிக்க சீன என்ஜினை அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி காசிமேடு பகுதியில் உள்ள மீனவர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.


 

 
அதிக வேகம் மற்றும் குதிரைத் திறன் கொண்ட சீன என்ஜின்களை படகுகளில் பொருத்தி மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், காசி மேடு பகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் சீன என்ஜின்களை பயன்படுத்தி மீன் பிடித்து வருவதாகவும், இதனால் ஆழத்தில் வசிக்கும் பெரிய மீன்கள் அழியும் நிலை ஏற்பட்டு வருவதாகவும் அங்கு வசிக்கும் மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில், இன்று காலை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, படகுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சீன என்ஜின்களை அகற்ற வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர். 
 
அவர்களின் போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும், அவர்கள் கலைந்து செல்லாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், எண்ணூர், திருவெற்றியூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது நடந்த கலவரத்தில் சில பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
 
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி மீனவர்களை கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.