1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 12 ஜூன் 2016 (14:56 IST)

கொட்டாங்குச்சி எரித்து பவுடராக்கும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே செம்மங்கரையில் தேங்காய் கொட்டாங்குச்சி எரித்து பவுடர் ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவன பணிகள் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பலரும் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 


 

 
கரூர் மவாட்டம், க.பரமத்தி ஒன்றியம் துக்காச்சி ஊராட்சியில் செம்மங்கரை உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான நிலத்தில் பெரிய குழி தோண்டப்பட்டு அதில் தேங்காய் கொட்டாங்குச்சிகளை வைத்து எரித்து அவற்றின் மூலம் பவுடராக்கி வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவன பணிகள் தொடங்க கடந்த பல நாட்களாக பணிகள் நடைபெற்று வந்துள்ளது. 
 
இதற்காக முதல் கட்டமாக பல்வேறு இடங்களில் இருந்து தேங்காய் தொட்டாங்குச்சிகளை சேகரித்து லாரிகள் மூலம் கொண்டு வந்து அங்கு குவிக்கப்பட்டுள்ளது. இவற்றை எரித்தால் ஏற்படும் புகை மற்றும் அதன் துகள்களால் நிலங்கள் மாசு படுவதுடன் இவற்றை சுவாசிக்கும் கால்நடைகள் பாதிக்கப்படும் அத்தோடு மனிதர்களுக்கு பல விதமான நோய்கள் உண்டாக கூடும் என்பதை அறிந்த செம்மங்கரை, அகிலாண்டபுரம், வேலாயுதம்பாளையம், வேலாங்காட்டூர் புதூர், காட்டம்பட்டி, உங்காம்பாளையம், காட்டூர், நடுப்பாளையம் உள்ளிட்ட அப்பகுதி சுற்று வட்டார கிராம பொதுமக்கள் இந்த தொழில் நிறுவன பணிகள் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பலரும் ஒன்று கூடி இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 
 
கூட்டத்தில் இந்த நிறுவனத்திற்கு எதிர்ப்பு தொரிவித்து பலரும் தங்களது கருத்துகளை பேசினர். இந்த தொட்டாங்குச்சி எரிக்கும் நிறுவனத்திற்கு அரசால் அனுமதி வழங்க கூடாது. என மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகங்களை வலியுறுத்துவது. தவறும் பட்சத்தில் சட்ட விதிகளுக்குட்பட்ட பல்வேறு பேராட்டங்களை நடத்துவதென ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது. 
 
இது குறித்து தகவலறிந்த தென்னிலை காவல் நிலைய எஸ்.ஐ பவுனுசாமி, ஊராட்சி தலைவர் பழனிச்சாமி,  வருவாய்த்துறையினர் ஆகியோர் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். பொதுமக்கள் எதிர்ப்பை மீறி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என ஊராட்சி நிர்வாகிகள் உறுதி அளித்தனர். பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.. இதனால் அங்கு ஒரு மணிநேரத்திற்கு மேலாக பரபரப்பும் பதட்டமும் நிலவியது.