வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சி.ஆனந்தகுமார்
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2016 (19:39 IST)

கரூரில் அலப்பறை செய்யும் காங்கிரஸ் பிரமுகர் : நிர்வாகிகள் போர்க்கொடி

கரூரில், தன்னை ஒரு பெரிய அரசியல் தலைவர் போல பாவித்து கொள்ளும் ஜோதிமணியை, கட்சியை விட்டு தூக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் போர்கொடி தூக்கியுள்ளனர்.   


 

 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கடந்த சில மாதங்களாக, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதாக கூறி காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி, ஆங்காங்கே விழிப்புணர்வு வாசகங்களையும், காலெண்டர்களையும் அப்பகுதி மக்களிடம் அச்சடித்து விநியோகித்து வந்துள்ளார். 
 
மேலும் தற்போதைய சிட்டிங் திமுக எம்.எல்.ஏ கே.சி.பழனிச்சாமி பற்றி அவதூறாக பேசி வருகிறார்.
 
இந்நிலையில் தி.மு.க, காங்கிரஸ் கட்சி கூட்டணி உடன்பாடு ஆகி தி.மு.க தரப்பிலும், மற்ற கட்சி தரப்பிலும் அறிவிப்புகள் வெளியானதை தொடர்ந்தும், கட்சி தனக்கு வாய்ப்பளிக்காவிட்டால் நானே சுயேட்சையாக நிற்பேன் என்றும், காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தரக்குறைவாக ஆங்காங்கே பேசி வருகிறார். 
 
இதையடுத்து கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் அவருக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், வர்த்தக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகியுமான விஜய் ஆண்டனி காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதியதோடு, அதை பேக்ஸ் மற்றும் துண்டு பிரசூரங்களாகவும் விநியோகித்துள்ளார். 
 
இது குறித்து அவர் பேசுகையில் 'அரை வேக்காடு ஜோதிமணி ஒரு பெரிய காங்கிரஸ் தலைவர் போலவும், ராகுல் காந்தி தனது தொடர்பில் உள்ளதாக ஒரு மாயையை உருவாக்கியுள்ளார். மேலும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை பற்றியும், அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளரும், சிட்டிங் எம்.எல்.ஏ வுமான கே.சி.பழனிச்சாமியை  அவதூறாக கூறி வருவதை நிறுத்த வேண்டும்.

இல்லையென்றால் வர்த்தக காங்கிரஸ் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்துவதோடு, கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அப்பெண்மணியை கட்சியை விட்டு தூக்கி எறிய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.