வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 27 ஜூலை 2016 (08:54 IST)

வழி தவறி வந்துட்டியா?: கருணாநிதி மீது பாயும் கருப்பசாமி பாண்டியன்

ஜெயலலிதா முன்னிலையில் நேற்று அதிமுகவில் மீண்டும் சேர்ந்த கருப்பசாமி பாண்டியன் திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக சாடியுள்ளார்.


 
 
முன்னதாக அதிமுகவில் இருந்த கருப்பசாமி பாண்டியன் தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக திமுகவிற்கு மாறினார். அங்கு அவருக்கு நெல்லை மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.
 
பெண் ஒருவர் கருப்பசாமி பாண்டியன் மீது பரபரப்பு புகாஅர் அளிக்க, அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட நாட்களாக அதிமுகவில் சேர காத்திருந்த கருப்பசாமி பாண்டியன் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அக்கட்சியில் நேற்று சேர்ந்தார்.
 
பின்னர் இது குறித்து கூறிய அவர், தான் இறுதிக்காலம் வரை அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்கப்போவதாகவும், அரசியலில் மறுபிறவி எடுத்திருக்கும் நான் மகிழ்ச்சியோடு ஊருக்கு செல்வதாக கூறினார்.
 
மேலும், திமுக தலைவர் கருணாநிதி மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை வைத்தார். திமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை. கருணாநிதி மட்டும்போதும். மாநில அளவில் கட்சி இரண்டாக இருக்க வேண்டும். மாவட்ட அளவில் மூன்றாக இருக்க வேண்டும் என்றுதான் அவர் விரும்புவார். ஒரு மாவட்டத்தில் ஒரு தலைமையின் கீழ் இயங்கினால், இன்னொருவரைக் கொம்பு சீவி வளர்ப்பார்.
 
கலெக்டராக வேலை பார்த்த மாவட்டத்தில் தாசில்தாராக வேலை பார்க்க முடியாது என்று நான் பதவியில் இருந்து விலகிய போது கூறிய வார்த்தைகள் கருணாநிதிக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்திவிட்டது.
 
கருணாநிதியின் வீட்டிற்கு ஒருமுறை போனபோது, என்ன வழி தவறி வந்துட்டியா? என்றார். என் மனதுக்குள் இருந்த வருத்தத்தை அடக்கிக் கொண்டிருந்தேன். விசுவாசத்தைச் செயலில் காட்டுங்கள் என்றார். விசுவாசத்திற்கே மரியாதை இல்லாதபோது, அங்கிருப்பதில் என்ன பயன் என்பதால் வெளியேறினேன் என கருப்பசாமி பாண்டியன் தனது ஆதங்கங்களை கொட்டினார்.