வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 25 மே 2016 (20:29 IST)

பத்தாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து கூறிய கருணாநிதி

இன்று காலை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகத்தில் 93.6 சதவீத மாணவ, மாணவிகள் இதில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


 

 
இந்நிலையில், இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி தன்னுடைய முகநூல் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
 “பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி வந்ததைத் தொடர்ந்து இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியல் வெளி வந்திருக்கின்றது. இதில் 499 மதிப்பெண்கள் பெற்று,திண்டுக்கல் மாணவி பிரேமசுதா, விருதுநகர் மாணவர் சிவக்குமார் ஆகிய இருவரும் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர். 498 மதிப்பெண்கள் பெற்று 50 மாணவர்கள் இரண்டாம் இடமும், 497 மதிப்பெண்கள் பெற்று 204 மாணவர்கள் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.
 
இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் ஒட்டுமொத்தமாக 10 இலட்சத்து 72 ஆயிரம் பேர் தேர்வு எழுதி 93.6 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டு 92.9 சதவிகித மாணவர்களே தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு அதை விட அதிக மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது. 
 
இந்த ஆண்டு மாணவர்கள் 91.3 சதவிகிதம் பேரும், மாணவிகள் 95.9 சதவிகிதம் பேரும் தேர்வு பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.