செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 23 டிசம்பர் 2017 (15:19 IST)

2ஜி வழக்கின் தீர்ப்பு ; கனிமொழியை முத்தமிட்டு வாழ்த்திய கருணாநிதி

2ஜி அலைக்கற்று வழக்கின் தீர்ப்பையடுத்து சென்னை திரும்பிய கனிமொழி திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

 
நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறி விட்டது எனக்கூறிய நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவித்தார்.  
 
இந்த தீர்ப்பை நாடெங்கும் உள்ள திமுகவினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். சென்னையில் உள்ள அறிவாலயத்திலும் மகிழ்ச்சி களை கட்டியது. 
 
இந்நிலையில், டெல்லியிலிருந்து விமானம் மூலம் இன்று ஆர்.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் இன்று சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் திமுகவினர் திரண்டு வந்து அவர்கள் இருவருக்கும் உற்சாக வரவேற்பளித்தனர். 
 
அதன்பின் கோபலபுரம் வீட்டிற்கு வந்த கனிமொழி, அவரது சகோதரரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை கட்டியணைத்து கண்ணீர் விட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 
 
அதன்பின் தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். ‘அப்பா நான் விடுதலை ஆகிவிட்டேன்’ என அவர் கூற, மகிழ்ச்சியுடன் கருணாநிதி கனிமொழியின் கரங்களை பிடித்துக்கொண்டார். மேலும், கனிமொழியின் கன்னத்தில் முட்டுமிட்டு அவருக்கு ஆசி வழங்கினார். அங்கிருந்த துரை முருகன் கருணாநிதியின் காதின் அருகில் சென்று ‘ராசாவும் விடுதலை ஆகிவிட்டார்’ எனக் கூற, முகத்தில் புன்னகை புரிந்து கருணாநிதி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதன்பின்பு, வெளியே கூடியிருந்த தொண்டர்களை பார்த்த கருணாநிதி அவர்களை நோக்கி கையசத்தார்.
 
இதனால் அங்கு கூடியிருந்த திமுகவின் உற்சாக குரல் எழுப்பினர்.