வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 26 பிப்ரவரி 2015 (11:28 IST)

என்ன செய்யப் போகிறார்கள் என்று முதலமைச்சர் கூறவே இல்லை: கருணாநிதி குற்றச்சாட்டு

முதலமைச்சரின் பதிலுரை கடந்த காலத்தில் இந்த ஆட்சியினர் என்னென்ன செய்தார்கள் என்பது பற்றியே இருக்கிறதே தவிர, இந்த ஆண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்று கூறப்படவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். 

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கவர்னர் உரை பற்றி நான் கருத்து கூறும்போது, “கவர்னர் உரை கடந்த ஆண்டில் இந்த ஆட்சியினர் என்னென்ன செய்தார்கள் என்பது பற்றிய விளம்பர உரையாக இருக்கிறதே தவிர, அடுத்த ஆண்டுக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை” என்று தெரிவித்திருந்தேன். 
 
என்னுடைய இந்தக் கருத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், முதலமைச்சரின் பதிலுரையும், கடந்த காலத்தில் இந்த ஆட்சியினர் என்னென்ன செய்தார்கள் என்பது பற்றியே இருக்கிறதே தவிர, இந்த ஆண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்று கூறப்படவில்லை. பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்து, அதன் பொது விவாதத்திற்குப் பதில் அளிப்பது போலத்தான் முதலமைச்சரின் உரை அமைந்துள்ளது. 
 
செம்மொழி பற்றியும், தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவம் தராதது பற்றியும், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைப் புகுத்தியதைப் பற்றியும் தெரிவித்திருந்தேன். முதலமைச்சரின் பதிலிலே அது பற்றி எதுவும் இல்லை. “மத்திய அரசு திட்டக் குழுவை மாற்றியிருப்பது பற்றி கவர்னர் உரையில் வரவேற்றிருக்கிறீர்களே, அப்படியானால் மாநிலத்தில் திட்டக்குழுவின் கதி என்ன” என்று கேட்டிருந்தேன்.
 
பேரவையில் முதலமைச்சர் அளித்த பதிலில் இதைப் பற்றி எதுவுமே கூறவில்லை. “அ.தி.மு.க. ஆட்சியினால் அறிவிக்கப்பட்ட விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்றவை இன்னும் 90 லட்சம் பேர்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்படவில்லை என்றும், வழங்கப்பட்ட ஆடு, மாடுகளும் சந்தைகளிலே விற்கப்படுகிறது என்றும் வந்த செய்திகளுக்கு என்ன விளக்கம்” என்று கேட்டிருந்தேன். அதற்கு முதலமைச்சர் பதில் கூறவே இல்லை. 
 
நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளை எல்லாம் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறீர்கள் என்று கேட்டிருந்தேன். கடந்த ஆண்டு அக்டோபர்த் திங்களில் உலக அளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநாடு நடத்தப் போவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தீர்களே, இப்போது அந்த மாநாடே நடைபெறாமல், வரும் மே மாதத்தில்தான் அந்த மாநாட்டினைக் கூட்டப்போவதாகத் தெரிவிக்க என்ன காரணம் என்று வினவியிருந்தேன். 
 
தி.மு.க. சார்பில் பேரவையில் கவர்னர் உரை மீது உரையாற்றிய ஐ.பெரியசாமியும், எஸ்.எஸ். சிவசங்கரும், மற்ற எதிர்க்கட்சிகளின் சார்பில் உரையாற்றியவர்களும் அடுக்கடுக்கான பிரச்சினைகளை எழுப்பி, அவற்றிற்கெல்லாம் பதில் எங்கே என்று கேட்டார்களே, எதற்காவது பன்னீர்செல்வம் பதில் சொன்னாரா என்றால் கிடையாது. 
 
ஏற்கனவே மின் திட்டங்கள் பற்றிப் பேரவையிலே அவர் படித்த அறிக்கையையே மீண்டும் ஒரு முறை படித்திருக்கிறார். செய்யூர் அனல் மின் நிலையம் எங்கே என்றால், இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் அரசால் முடிக்கப்பட்டுள்ளன என்பதுதான் முதலமைச்சரின் பதில். 25-4-2013 அன்று ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 ஆவது விதியின் கீழ் படித்த அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின் திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மின் நிலையங்கள் மற்றும் மின் தொடர் பாதைகள் அமைக்கும் திட்டம் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 
 
20 ஆயிரம் புதிய மின் மாற்றிகள் அமைக்கும் திட்டம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு மின் வழித்தடங்கள் அமைக்கும் திட்டம் 850 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 16,350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழகம் விரைவில் மின் மிகை மாநிலமாக மாறும் என்பதோடு, மின் நுகர்வோருக்கு தடையற்ற சீரான மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும் என்றும் அறிவித்தாரே, என்ன ஆயிற்று இந்த அறிவிப்புகள்? - என்று நான் கேட்டிருந்தேன்.
 
அதற்கு பேரவையில் முதலமைச்சர் அளித்த பதில் என்ன தெரியுமா? “2 ஆயிரம் மெகாவாட் திறனுள்ள மின் திட்டத்திற்கான ஆய்வுப் பணி முனைப்புடன் நடைபெற்று வருகின்றன” என்பதுதான். மேலும் முதலமைச்சர் பன்னீர்செல்வம், தனது பதிலுரையில் “மொத்தம் 22 ஆயிரத்து 440 மெகாவாட் மின்சாரம் கிடைக்க இந்த அரசால் வழி வகை செய்யப்பட்டுள்ளது” என்று சொல்லியிருக்கிறார்.
 
இந்த அளவுக்கு மின்சாரம் கிடைக்க இந்த அரசு வழி வகை செய்திருக்கிறது என்பது உண்மையானால்; நீண்ட கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் 3 ஆயிரத்து 330 மெகாவாட் மின்சாரமும், நடுத்தரக் காலக் கொள்முதல் மூலம் 500 மெகாவாட் மின்சாரமும் வாங்குவதற்குத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒப்பந்தம் செய்திருப்பது ஏன்? விளக்கம் அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறதா, இல்லையா?. 
 
தமிழக இலங்கை மீனவர்களிடையே 5-3-2015 அன்று சென்னையில் பேச்சுவார்த்தை நடத்திட மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று பன்னீர்செல்வம் தனது உரையிலே கூறியிருக்கிறார். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை 5 ஆம் தேதி கிடையாதென்றும், அது ஒத்திவைக்கப்பட்டு விட்டது என்பதையும் அவருக்கு நான் நினைவூட்டுகிறேன்.

முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேரவையில் படித்த இந்த விவரங்கள் அனைத்தும், பொதுவாக மானியக் கோரிக்கைகளின் போது, அந்தந்த துறை அமைச்சர்கள் தங்கள் பதிலுரையிலும், கொள்கை விளக்கக் குறிப்பிலும் சுட்டிக்காட்டுகின்ற புள்ளி விவரங்களாகும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.  இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.