1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 21 ஜூலை 2014 (08:30 IST)

திமுக பிளவுபட்டுவிடும் என்று வாய் பிளந்து, மனப்பால் குடித்தவர்கள் ஏமாந்து போய்விட்டனர் - கருணாநிதி

திமுக பிளவுபட்டுவிடும் என்று மனப்பால் குடித்தவர்கள் ஏமாந்து போய்விட்டனர் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
 
திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
நாடாளுமன்ற தேர்தலில் திமுக அனைத்து இடங்களிலும் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டதும், இனி அவ்வளவுதான். திமுக இனி எழுந்திருக்கவே முடியாது; முன்னணி தலைவர்கள் எல்லாம் திமுகவை விட்டு விலகி விடுவார்கள். தொண்டர்களோ கேட்கவே வேண்டியதில்லை. ஆயிரக்கணக்கில் நம்முடைய கட்சியிலே வந்து இணைந்து விடுவார்கள்.
 
திமுக தலைமை இனி எழுந்திருக்கவே எழுந்திருக்காது என்றெல்லாம் வழக்கம்போல் நம்முடைய எதிரிகள் மனப்பால் குடித்தார்கள். அவர்களுடைய கற்பனை எண்ணங்களை எல்லாம் தூள் தூளாக்குகின்ற விதத்திலே திமுகவின் அடிமட்டத்தில் ஆணி வேர்களாக உள்ள ஒரு தொண்டன் கூட அசையவில்லை என்பதை பார்த்த பிறகுதான், அவர்கள் யோசிக்கத் தொடங்கினார்கள்.
 
கொலு பொம்மைகளை நினைத்தவாறு இடம் மாற்றி வைப்பதை போல திமுகவில் சர்வாதிகாரம் கிடையாதுதான். குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம். ஆனால் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடக்கூடாதல்லவா? எனவே திமுகவில் நடவடிக்கை என்றால், அதற்காக விளக்கம் கேட்டு, அதிலே என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் பரிசீலித்து அதற்கு பிறகு ஜனநாயக ரீதியாக முடிவெடுக்கிறோம்.
 
அந்த வகையில்தான் வேட்பாளர்களின் தோல்விக்கு திமுகவின் முன்னணியினர் யாராவது காரணமாக செயல்பட்டார்களா? என்று அந்தந்த வேட்பாளர்களிடமே அறிக்கை கேட்டுப்பெற்றோம். அந்தந்த நாடாளுமன்ற தொகுதிகளில் கட்சி தலைமை சார்பில் நியமிக்கப்பட்டிருந்த பொறுப்பாளர்களிடமும் தனியாக அறிக்கை கேட்டுப்பெற்றோம்.

அவர்கள் அளித்த அறிக்கைகளில் உள்ள புகார்களில் அதிக அளவுக்கு யார், யார் மீது குற்றச்சாட்டுகள், புகார்கள் கூறப்பட்டிருந்தனவோ, அவர்களையெல்லாம் தற்காலிகமாக நீக்கி வைத்து, அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், அவர்கள் பதிலளிக்காவிட்டால், அவர்கள் பதில் கூறுவதற்கு எதுவும் இல்லை என்று கருதி சட்டதிட்டங்கள்படி நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கட்சி தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 
திமுகவின் இந்த நடவடிக்கைக்கு பிறகாவது – நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஒரு இடத்திலே கூட வெற்றி பெற முடியாத அளவுக்கு தோற்றுவிட்டது, இனி இங்கே இருந்து பயனில்லை, பழுத்த மரத்தை தேடி செல்லலாம் என்று நடவடிக்கை எடுக்கப்பட்ட 33 பேரில், ஒருவரை தவிர வேறு யாரும் எண்ணிக்கூடப்பார்க்கவில்லை. அந்த ஒருவரும் கூட, அங்கிருந்து வந்தவர்தான். அவர் தன் குணத்தை காட்டிவிட்டார். விளக்கம் அளிப்பதற்கு பதிலாக, கழக தலைமையை தாக்கி பதில் அளித்திருந்தார்.
 
ஒரு மாபெரும் இயக்கத்தில் – ஒரே இயக்கத்தில் இருந்தாலும் ஆங்காங்கு ஓரிருவரிடையே கருத்து வேற்றுமைகள் இருக்கத்தான் செய்யும் என்பதை உணராதவன் அல்ல நான். நம்மை பிடிக்காதவர்கள் வேண்டுமானால் இதையே ஒரு காரணமாக வைத்து ஒன்றை பத்தாக்கி, துரும்பை தூணாக்கி, சிறு கீறலை கூட மிக பெரும் பிளவு என்று கூற முன்வருவார்கள்.
 
நமது இயக்கம் ஜனநாயக இயக்கம், சர்வாதிகார இயக்கங்களில் வேண்டும் என்றால் இன்று நீ மந்திரி, நாளை எந்திரி என்றும், இன்று நீ மாவட்ட செயலாளர், நாளை இன்னொருவர் என்றும் அறிவிப்புகளை தன்னிச்சையாக செய்யக்கூடும். திமுக கடுமையாக நடவடிக்கை எடுக்கும். பலர் மீது நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்கும். அதனால் ஏராளமானவர்கள் திமுகவை விட்டு மாற்று கட்சிக்கு சென்று விடுவார்கள். திமுக என்ற ஒன்று இல்லாமலே போய்விடும் என்றெல்லாம் சிலர் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
 
திமுகவில் பிளவு ஏற்படும் என்று எண்ணி வாய் பிளந்து, மனப்பால் குடித்தவர்கள் எல்லாம், கட்சியின் நடவடிக்கை காரணமாக ஏமாந்து போய் விட்டார்கள். தற்காலிக நடவடிக்கை எடுத்து விளக்கம் கேட்டபோது, யாரும் விளக்கம் அளிக்க முன்வர மாட்டார்கள், அவ்வளவு பேரும் திமுகவை விட்டு வெளியேறி விடுவார்கள் என்று எதிர்பார்த்தவர்கள், அய்யோ நடவடிக்கை ரத்தா? திமுக மீண்டும் ஒன்றாகி விடுகிறதா? என்றெல்லாம் எண்ணக்கூடும்.
 
திமுக கண்ணாடி குடுவை அல்ல; கண்ணாடி உடைந்தால் ஒட்ட வைக்க முடியாது; திமுக மாபெரும் நீர்த்தேக்கம். நீரடித்து நீர் விலகாது. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் வருத்தம் அடையலாம். அவர்களுக்கெல்லாம் ஆறுதலாகத்தான் விரைவில் மாவட்ட, ஒன்றிய, நகரத் தேர்தல்கள் வரவிருக்கின்றன. அந்த தேர்தலில் உண்மையிலேயே தவறு செய்தவர்களை, திமுக தொண்டர்களே தோற்கடிக்க செய்வார்கள். அதையும் மீறி தவறுகள் தொடருமேயானால், புகார்கள் தொடர்ந்து வருமேயானால், பெரியார் கூறிய கழக கட்டுப்பாடுதான் முக்கியம் என்பதை தவிர வேறு வழியில்லை. கழக கட்டுப்பாடே, திமுகவின் உயிர் மையம். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை; கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று கருணாநிதி கூறியுள்ளார்.