1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 25 நவம்பர் 2014 (17:32 IST)

கார்த்தி சிதம்பரம் சர்ச்சை பேச்சால் தமிழக காங்கிரசில் மீண்டும் கோஷ்டி பூசல்

காமராஜர் பற்றி கார்த்தி சிதம்பரம் பேசியதால் ஏற்பட்ட சர்ச்சையின் விளைவாக, தமிழக காங்கிரசில் மீண்டும் கோஷ்டி பூசல் வெடித்துள்ளது.
 
தமிழக காங்கிரசில் இருந்து பிரிந்து ஜி.கே.வாசன் புதுக்கட்சி தொடங்கியுள்ளார். இதையடுத்து, காங்கிரஸ் மேலிடம் அதிரடியாக ஈவிகேஎஸ் இளங்கோவனை மாநில தலைவராக நியமித்தது. அன்று முதல் கட்சியில் இருந்து விலகிச் செல்ல இருக்கும் முக்கிய நிர்வாகிகளை எல்லாம் தக்க வைத்துக்கொள்ளும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் இளங்கோவன். இதற்காக, மாவட்ட வாரியாக செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டி, அனைத்து முக்கிய தலைவர்களையும் ஒன்றாக அழைத்துச் சென்று வருகிறார்.
 
இந்நிலையில், சத்தியமூர்த்தி பவனில் நடந்த இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கார்த்தி சிதம்பரம், ‘காமராஜர் ஆட்சி என்ற மாயையில் இருந்தால் ஒருபோதும் நாம் வெற்றி பெற முடியாது‘ என்றார். இந்த பேச்சுக்கு கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கூட்டத்திலும் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த முக்கிய தலைவர்கள் தங்கள் பேச்சில் கார்த்தி சிதம்பரத்தை கண்டித்தனர்.
 
மேலும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் மேலிடத்துக்கு இமெயில் மூலம் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். இது தமிழக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று முன்தினம் தாம்பரத்தில் கட்சி விழாவில் பங்கேற்ற இளங்கோவன், கார்த்தி சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் மீண்டும் தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து நடக்கக்கூடிய கட்சிக் கூட்டங்களை சிதம்பரம் ஆதரவாளர்கள் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.