வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 3 அக்டோபர் 2015 (13:06 IST)

கனிமொழியின் முன்னாள் கணவர் இப்போது சாமியார்

கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் முன்னாள் கணவர் அதிபன் போஸ் இப்போது சாமியார் ஆகி விட்டார்.


 

 
கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியின் முன்னாள் கணவன் அதிபன் பிரபல தொழிலதிபராக விளங்கினார். இப்போது அமெரிக்காவில் காவி வேட்டி கட்டி சாமியாரக செட்டிலாகி விட்டார். இப்பொது தமிழ்நாட்டிலும் ஆன்மீக கருத்துக்களை பரப்ப இருக்கிறார்.
 
அமெரிக்காவில் தனக்கு ஒரு லட்சம் சீடர்கள் இருப்பதாக கூறும் இவர் சமீபத்தில் ஒரு பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில் “சிறு வயதிலிருந்தே எனக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டு. கனிமொழியுடன் திருமணம் நடந்த பிறகு என் வாழ்வில் முக்கியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அப்போது நான் உயிருடன் இருக்கும்போதே இறந்து, என் ஆத்மா என்னை விட்டு வெளியேறியது போல் உணர்ந்தேன். அந்த இறப்புக்கு நிகரான சம்பவத்தில் நான் இந்த உலகத்தை விட்டு வேறு உலகத்திற்குள் புகுந்ததாக கருதினேன்.
 
அதற்கு பிறகுதான் முழுமையான ஆன்மிகத்தில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இன்று வரை ஆன்மிகத்தில்தான் என் முழு கவனமும் இருக்கிறது. அமெரிக்காவில்  எனக்கு ஆசிரமங்கள் இருக்கின்றன. அதில் ஒரு லட்சம் சீடர்கள் ஆன்மிகத்தை பரப்பி வருகிறார்கள்.
 
கனிமொழியை திருமணம் செய்வதற்கு முன்பே, என்னை அரசியலில் ஈடுபடுத்தக்கூடாது, நீயும் அரசியலில் ஈடுபடக்கூடாது' என்று சில நிபந்தனைகளை விதித்தேன். அதை அவர் ஒப்புக்கொண்ட பிறகுதான் திருமணம் நடந்தது. ஆனால், அதை கனிமொழி கேட்கவில்லை. அதற்கு பிறகு நாங்கள் ஒருமித்த கருத்துடன் விலகிக் கொண்டோம். அதன்பின், முழு மனதோடு ஆன்மிக பாதையில் ஈடுபட்டு வருகிறேன்.


 

 
இருபது ஆண்டுகளாக ஆன்மீகத்தில் இருக்கிறேன். அந்த அனுபவங்களை ஒரு நூலாக எழுதியிருக்கிறேன். அதில் மனதை எப்படி ஒரு நிலைப்படுத்துவது என்பது முதல் மனிதன் என்பவன் யார் என பல விஷயங்களை அதில் குறிப்பிட்டிருக்கிறேன். அதுமட்டுமில்லாமல், ஆன்மிகத்தில் ஒரு மனிதன் எப்படி தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும், அவ்வாறு ஈடுபட்டால் என்னென்ன நிலையை அடைவான் என்பதோடு, சிறு உயிர்களுக்கு வயிறார உணவு அளித்தாலே அவன் மோட்சம் அடைவான் என்றும் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளேன். விரைவில் அதை வெளியிடப் போகிறேன்.
 
தமிழகத்திலும் எனது ஆன்மிக பணியை துவங்க இருக்கிறேன். தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதனால்தான் அவர் முன்னிலையில் எனது புத்தகத்தை வெளியிட முதல்வரிடம் நேரம் கேட்டிருக்கிறேன். நல்ல முடிவு சொல்வார் என்று நம்புகிறேன்.
தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. தானத்தில் பெரிய தானமான அன்னதானம் திட்டத்தை தமிழகம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக நடத்தி வருகிறார். யோகி போன்ற ஒருவரால்தான் இதையெல்லாம் செய்ய முடியும். அதேபோல்தான் மத்தியிலும் மோடி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். அவரும் ஒரு யோகிதான். 
 
நான் இருபது நாடுகளை தேர்ந்தெடுத்து அதில் யோகாவை பரப்ப நினைத்தேன். ஆனால் மோடி உலக நாடுகளை இணைத்து யோகா தினமாகவே கொண்டாடி விட்டார். இதுவரை இருந்த பிரதமர்களிலேயே மோடி மிகச் சிறப்பாக செயல்படுகிறார்” என்று கூறினார்.