1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (13:10 IST)

போத்தீஸ் விளம்பரத்தில் நடித்தது ஏன்? : கமல்ஹாசன் விளக்கம்

போத்தீஸ் துணிக்கடை விளம்பர படத்தில் நடித்தது பற்றி கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.


 

 
நடிகர் கமல்ஹாசன் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஆனால் இதுவரை ஒரு விளம்பர படத்தில் கூட அவர் நடித்ததில்லை. ஆனால், கடந்த தீபாவளி சமயம், திடீரென போத்தீஸ் விளம்பரத்தில் நடித்தார்.
 
அதற்கு அவர் ரூ.10 கோடி சம்பளம் வாங்கியதாகவும், அது ஒரு தொண்டு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் பரவியது. ஆனால் போத்தீஸ் நிறுவனம் அதை மறுத்தது. கமலுக்கு நிறைய பணப்பிரச்சனை என்றும், அதை சமாளிக்கவே அவர் விளம்பரத்தில் நடித்தார் என்றும் தகவல் வெளியானது. ஆனால் கமல் அது பற்றி அப்போது எதுவும் கூறவில்லை.
 
தற்போது அதுபற்றி மௌனம் கலைத்துள்ளார். அவர் கூறும்போது “ உதவி செய்வது என்பது மற்றவர்களுக்கு தெரியாமல் செய்ய வேண்டும். அதுதான் முக்கியம். நான் விளம்பர படத்தில் நடித்த பணம் பலருக்கு உதவி செய்யவே. நானும் ஒரு பத்திரிக்கை அதிபரும் இணைந்து ஒரு தொண்டு நிறுவனம் நடத்துகிறோம்.
அந்த நிறுவனம் மூலம் பல உதவிகளை செய்து வருகிறோம். அது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று நினைத்தோம். 7000 எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை நாங்கள் தத்தெடுத்து வளர்த்து வருகிறோம். அவர்களில் சிலர் இப்போது கல்லூரி செல்லும் வயதுக்கு வந்துவிட்டார்கள். சிலர் திருமண வயதை எட்டி விட்டார்கள். குடும்பம் பெரிதாகிவிட்டது. அவர்கள் யார் யார் என்று என்று போட்டோ போட்டு விளம்பரப்படுத்த முடியாது. 
 
என் ரசிகர்கள் இதுவரை 20 கோடிக்கு மேல் தங்கள் சொந்த காசை போட்டு நற்பணி செய்திருக்கிறார்கள். என் பங்கிற்கு நானும் எதாவது செய்ய வேண்டும் அல்லவா? அதனால்தான் விளம்பர படத்தில் நடித்தேன். சினிமாவில் சம்பாதித்து அதை செய்வது கடினம். அதனால்தான் விளம்பர படத்தில் நடித்தேன். தேவைப்பட்டால் இனியும் விளம்பர படத்தில் நடிப்பேன். அந்த பணம் பலருக்கு உதவும்” என்று கமல்ஹாசன் கூறினார்.