வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 18 பிப்ரவரி 2017 (16:29 IST)

எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுங்கள் - யாரை சொல்கிறார் கமல்ஹாசன்?

தமிழக மக்கள் தங்கள் தொகுதி எம்.எல்.ஏக்களை, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து வரவேற்க வேண்டும் என மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின், பொதுமக்களும் அவருக்கு ஆதரவாகவே குரல் கொடுத்தனர். ஆனால், அதை சசிகலா தரப்பு கண்டுகொள்ள வில்லை. எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்து விடக்கூடாது என கருதிய சசிகலா தரப்பு, அதிமுக எம்.எல்.ஏக்களை, கூவத்தூரில் உள்ள ஒரு விடுதியில் சிறை வைத்தது. அங்கு அவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. அங்கிருந்து வெளியேற அனுமதிக்கவில்லை.
 
சசிகலாவை எதிர்த்து நிற்கும் ஓ.பி.எஸ்-ற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என தமிழக மக்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவர்களை கூவத்தூர் விடுதியில் சசிகலா தரப்பு அடைத்து வைத்தது, மக்களின் மத்தியில் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டியிருந்ததால், 10 நாட்களுக்கு பிறகு எம்.எல்.ஏக்கள் அங்கிருந்து சட்டசபைக்கு கார் மூலம் அழைத்து வரப்பட்டனர். 
 
சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அல்லது மற்றொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என ஓ.பி.எஸ் அணி மற்றும் திமுக தரப்பு கோரிக்கை வைத்தது. ஆனால், நிராகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த அமளியால், மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து திமுக எம்.எல்.ஏக்களும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அதன்பின் நடந்த குரல் வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
 
இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் “ தமிழக மக்கள், தங்கள் தொகுதி எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து வரவேற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


 

 
ஏற்கனவே, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் மீது அவர்களின் தொகுதி மக்கள் கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் தொகுதி பக்கம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசனும் அதையே உணர்த்துவது போல் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளதால், அதற்கு பலரும் வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.