வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 17 அக்டோபர் 2014 (17:11 IST)

மாவோயிஸ்டுகள் சரணடைந்தால், தகுந்த வெகுமதி - கே.விஜயகுமார் பேட்டி

இந்தியாவில் மாவோயிஸ்டுகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வந்தால், சுமூகப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை மூத்த பாதுகாப்பு அதிகாரி கே.விஜயகுமார் கூறினார்.

 
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள வனப் பகுதி மற்றும் வன கிராமங்களைப் பார்வையிட்ட மத்திய உள்துறை மூத்த பாதுகாப்பு அதிகாரியும் முன்னாள் தமிழக சிறப்பு அதிரடிப் படை தலைவருமான கே.விஜயகுமார் நேற்று மாலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் அருகே உள்ளது கெத்தேசால் வன கிராமம். இந்தக் கிராமத்தில் சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன் ஒரு முறை தாக்குதல் நடத்தி, நால்வரைக் கொடூரமாக வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் கொன்றான். இதனால் பயந்துபோன கிராம மக்கள், இந்தக் கிராமத்தில் இருந்து சிவன் கோவிலை மூடி விட்டனர்.
 
சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனைச் சுட்டுக் கொன்ற பிறகுதான் மூடப்பட்ட சிவன் கோவிலை மீண்டும் திறந்தனர். அந்தக் கோவிலுக்குச் சென்று வந்தேன். தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடக ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதியில் உள்ள வனப் பகுதியைப் பயன்படுத்திக்கொண்டு நக்சல் மற்றும் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விடக்கூடாது என்பதைக் கண்காணித்து வருகிறோம்.
 
தற்போது அதுபோல் எந்த ஊடுருவலும் இல்லை. குறிப்பாகத் தமிழ்நாட்டில் நக்சல் மற்றும் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இல்லை. இதற்குக் காரணம் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் போலீஸாரின் தீவிர கண்காணிப்பு ஆகும். உளவுப் பிரிவு தீவிரமாகப் பணியாற்றுகிறது.
 
மவோஸ்டுகள் ஆயுதங்களைக் கீழே போட்டு வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தது போல் அவர்கள் ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டுத் திருந்தி வாழ நினைத்து வந்தால் அவர்களுக்கு முழு உதவி செய்யப்படும். சரணடைந்தால் அதற்குத் தகுந்த வெகுமதியும் வழங்கி, அவர்கள் குடும்பத்திற்கும் அவர்கள் குழந்தைகள் படிப்பிற்கும் உதவி செய்யப்படும்.
 
இவ்வாறு மத்திய உள்துறை மூத்த பாதுகாப்பு ஆலோசகரும் தமிழக அதிரடிப் படை முன்னாள் தலைவருமான கே.விஜயகுமார் கூறினார்.