மருத்துவமனையில் பிறந்த குழந்தை கடத்தல் : 6 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

மருத்துவமனையில் பிறந்த குழந்தை கடத்தல் : 6 மணி நேரத்தில் மீட்ட போலீசார்


Murugan| Last Modified வெள்ளி, 11 நவம்பர் 2016 (13:12 IST)
பிறந்து சில மணி நேரமான குழந்தை, ஒரு பெண்ணால் கடத்தப்பட்டு, அதன் பின் போலீசாரால் மீட்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 
சமீபகாலமாக மருத்துவமனையில் குழந்தைகள் திருடப்படுவது அதிகரித்து வருகிறது. சேலத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி ராஜன், கர்ப்பிணிப் பெண்ணான தனது மனைவியை, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தார். அங்கு அவருக்கு கடந்த 8ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் அவர் நார்மல் வார்டிற்கு மாற்றப்பட்டார்.
 
அப்போது, அவரின் அறையில் அர்ச்சனா என்ற பெண் இருந்துள்ளார். ஜோதியிடம் பேச்சு கொடுத்த அவர் தன்னுடைய குழந்தை ஐசியூ வார்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார். சகஜமாக பேசிக் கொண்டிருந்ததால், ஜோதிக்கு அவர் மீது சந்தேகம் ஏற்படவில்லை. 
 
பிற்பகல் 1 மணி அளவில், மருத்துவரை பார்க்க ஜோதி செல்ல வேண்டி இருந்ததால், அந்த பெண்ணிடம் தனது குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்று விட்டார். திரும்பி வந்து பார்க்கும் போது தனது குழந்தை காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கிருந்த பெண்ணையும் காணவில்லை. 
 
எனவே அவர்தான் தனது குழந்தையை தூக்கி சென்றிருக்க வேண்டும் என கருதிய அவர், இதுகுறித்து உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார்.  போலீசாரிடமும் தகவல் கொடுக்கப்பட்டது. 
 
போலீசார் மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்த போது, குழந்தையை கையில் வைத்துக் கொண்டு அர்ச்சனா, 3 பேருடன்,  ஒரு வாடகை காரில் ஏறிச் செல்வது தெரியவந்தது. அந்த காரின் எண்ணை வைத்து, அதன் டிரைவரை அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அந்த பெண்ணின் வீட்டை அவர் அடையாளம் காட்டினார். 
 
அங்கு போலீசார் சென்று பார்த்த போது ஜோதியின் குழந்தை அங்கே இருந்தது தெரிய வந்தது. எனவே, குழந்தையை கடத்திய குற்றத்திற்காக அர்ச்சனா, அவரின் கணவர் நரேஷ், அவரின் தாய் பேபி, தந்தை ராமலிங்கம், அவர்களின் உறவினர் கோமதி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
இதற்கு முன் இதுபோல், குழந்தைகளை கடத்தியுள்ளனரா என போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகிறார்கள். குழந்தை கடத்தப்பட்டு 6 மணி நேரத்தில், துரித நடவடிக்கை எடுத்த போலீசாரை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :