வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2015 (16:49 IST)

”பெண்களின் உணர்வுகளை உள்வாங்கி தீர்ப்பெழுத வேண்டும்” - முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்

பெண்களின் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு தீர்ப்பெழுத வேண்டும் என்ற புரிதல் நீதிபதிகளுக்கு வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் கூறியுள்ளார்.
 

 
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தோடு இணைக்கப்பட்ட மகளிர் சட்ட உதவி மன்றத்தின் (25வது ஆண்டு) வெள்ளிவிழா ஞாயிறன்று (அக்.11) சென்னையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வை தொடங்கி வைத்து நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பேசியபோது, “சமூகத்தில் எதிர்மறையான செய்திகளே வந்து கொண்டிருக்கையில், விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, பெண்களுக்கு கல்வி அறிவை கொடுத்து, சொந்தக்காலில் நிற்கும் துணிவை கொடுத்தாலே வன்முறையில் இருந்து பாதிக் கிணற்றை தாண்டியவர்களாக மாறிவிடுவார்கள்.
 
நீதித்துறை, அரசுத்துறை, அரசியல்வாதிகள் அமைப்பு ஆணாதிக்கச் சிந்தனை கொண்டது. ஒரு துறையில் 50 பெண்கள் இருப்பதால் சமத்துவம் வந்துவிடாது. நீதிபதியை ஆண் நீதிபதி என்று கூறுவதில்லை. பெண் நீதிபதி என்று கூறுகிற போதே பெண்கள் போராட வேண்டி இருக்கிறது. அதுவே ஆணாதிக்க சமுதாயம் என்றுதானே பொருள்.
 
வழக்காடிக்கு என்ன பிரச்சனை என்பதை பார்க்காமல், குடும்பத்தை சிதைக்குமோ என்று நீதிபதிகள் பார்க்கிறார்கள். குடும்பம் என்பது பாதுகாப்பான சமூக அமைப்பு. அங்கு வன்முறை என்று வந்துவிட்டால் அந்த அமைப்பு உடைந்து விடுகிறது. இப்படிப் பார்ப்பதற்கு நீதிபதிகள் கற்றுக் கொள்ளவில்லை.
 
ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஒரு சராசரி ஆண் பார்வையிலிருந்து வழக்கை பார்க்கக்கூடாது. சராசரி ஆணும், சராசரி பெண்ணும் ஒன்றல்ல. பெண்களின் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு தீர்ப்பெழுத வேண்டும் என்ற புரிதல் இன்னும் வரவில்லை.
 
பாலியல் வழக்குகளில் பெண்ணின் உரிமை, கண்ணியம் பறிக்கப்பட்டுள்ளது என்ற நிலையில் இருந்து தீர்ப்பெழுத வேண்டும். இந்த நிலை வர நாளாகும். அதுவரை நமது போராட்டம் தொடர வேண்டும்.
 
உரிமைக்காக போராடும் போது அழுகையை நிறுத்த வேண்டும். பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. ஒரு சமயத்தில் கூட பெண்கள் பலவீனத்தை வெளிப்படுத்தக் கூடாது. குழந்தைகளுக்கு வீட்டிலேயே சமத்துவத்தை கற்றுக் கொடுக்கவேண்டும்” என்றார்.