வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 24 மே 2015 (11:24 IST)

2 ஜி வழக்கின் தீர்ப்பு வரும்; திமுக செல்வாக்கு மேலும் சரியும் - எச்.ராஜா

2 ஜி வழக்கில் தீர்ப்பு வர இருக்கிறது. அதனால் திமுக செல்வாக்கு மேலும் சரியும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
 
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட பின் பேசிய எச்.ராஜா, “அரசியல் மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்த மாதிரி தருணங்களில் வாழ்த்து சொல்வது, விழாக்களில் பங்கு கொள்வது தான் அரசியல் நாகரீகம். இதனால் பாஜகவுக்கு எந்த குறையும் வராது.
 
வழக்கில் பாஜக தலையிட்டது போல் பேசுவது நாட்டின் நீதித்துறையை கேவலப்படுத்தும் செயல். கீழ் நீதிமன்றம், தண்டனை வழங்கிய போதும் பாஜகதான் ஆட்சியில் இருந்தது. நீதித்துறையின் நடவடிக்கையில் ஒரு போதும் தலையிட மாட்டோம்.
 
கடந்த தேர்தலில் பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையேயான வாக்கு வங்கி வித்தியாசம் 4 சதவீதம்தான். இப்போது எங்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. 2 ஜி வழக்கில் தீர்ப்பு வர இருக்கிறது. அதனால் தி.மு.க. செல்வாக்கு மேலும் சரியும்.
 
வருகின்ற தேர்தலில் அதிமுகவுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி ஏற்படும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் வருவார்? யார் போவார்? என்பதையெல்லாம் இப்போது சொல்ல முடியாது. கூட்டணியை தேர்தல் நேரத்தில் தேசிய தலைவர் முடிவு செய்வார்” என்று கூறினார்.