செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 29 ஜூன் 2016 (13:31 IST)

25 ஆண்டுகளாக சிறையில் வாடும் நளினி விடுதலை ஆவாரா? - தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்ய வேண்டுமென 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
 

 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி சென்னை உயர்நீதிமன்ற தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”எந்த குற்றம் செய்திருந்தலாலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யலாம் என்ற தமிழக அரசின் கொள்கை முடிவுப்படி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யலாம்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
 
மேலும், தமிழக உள்துறை செயலருக்கு அளித்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தமது மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
 
இந்த வழக்கில் தமிழக அரசு தனது பதில் மனுவில், ”ராஜீவ் வழக்கை சிபிஐ விசாரித்ததால் நளினியை முன்விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரமில்லை” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 
மேலும், ’வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரை விடுவிப்பது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த காரணங்களால் இவ்விவகாரத்தில் தமிழக அரசு முடிவெடுக்க இயலாது’ என பதில் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை அன்று இந்த மனு மீது இறுதி விசாரணை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.