பி.ஆர்.பியை விடுவித்த நீதிபதி மகேந்திர பூபதி சஸ்பெண்ட்


லெனின் அகத்தியநாடன்| Last Modified வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (16:17 IST)
கிரானைட் மோசடி வழக்கில் பி.ஆர்.பழனிச்சாமியை விடுவித்த மேலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
 
 
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிரானைட் மோசடியில் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் பி.ஆர்.பழனிச்சாமி. இந்த வழக்கை விசாரித்து வந்த மேலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதி திடீரென பி.ஆர்.பி. பழனிச்சாமி உள்ளிட்டோரை விடுவித்து உத்தரவு பிறப்பித்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
மேலும் ஏற்கனவே நீதிபதி குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி மகேந்திர பூபதியை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
மதுரை மாவட்டத்தில் பல்லாயிரங்கோடி அளவிற்கு நடைபெற்றிருந்த கிரானைட் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் தலையிட்டு இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதியே உயர் நீதிமன்றம் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி உ.சாகாயம் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த ஆணையிட்டது. சகாயம் குழுவினரும் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்றனர்.
 
இந்நிலையில், மேலூர் மாவட்டம் கீழையூர் பகுதியில் பட்டா நிலங்களில் அனுமதியின்றி அடுக்கி வைத்தது தொடர்பான வழக்கு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் அதன் பங்குதாரர்களையும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மகாதேவன் என்பவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதி மகேந்திர பூபதி உத்தரவிட்டார். இது நீதித்துறை வட்டாரத்தில் அதிர்சசியை ஏற்படுத்தியது.
 
ஆனால் அதற்கு முந்தைய வாரம் நீதிபதி மகேந்திர பூபதி கிரானைட் வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக மகேந்திர பூபதி செயல்படுகிறார் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உரிய விளக்கம் கேட்டு மகேந்திரபூபதிக்கு உத்தரவிட்டது.
 
இந்நிலையிலேயே இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, 2 நீதிபதிகளை, மேலூர் கோர்ட்டுக்கு சென்று வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
 
அதன்படி மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி பஷீர் அகமது, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் ஆகியோர் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்றனர். அங்கு மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதியிடம் தனி அறையில் அவர்கள் விசாரணை நடத்தினர்.
 
ஒன்றரை மணி நேரம் விசாரணைக்கு பிறகு மேலூர் மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதி ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட விரைவு கோர்ட்டு 2ஆவது நீதிபதி பாரதிராஜா மேலூர் நீதிமன்றம் வரவழைக்கப்பட்டு மேலூர் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டாக பதவி ஏற்றுக் கொண்டார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :