1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 30 ஜனவரி 2015 (18:41 IST)

ஊழல் செய்திருந்தால் தூக்கில் போடுங்கள்: ஜெயந்தி நடராஜன் ஆவேசம்

அமைச்சராக இருந்தபோது தாம் எந்த ஊழலும் செய்யவில்லை என்றும், அப்படி தவறு செய்திருந்தால் தம்மை தூக்கில் போடட்டும் என்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜெயந்தி நடராஜன் ஆவேசமாகக் கூறினார்.
 
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியது ஏன் என்று விளக்கமளித்தார்.
 
செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமக்கு இது வேதனையான தருணம் என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த தாம் 4வது தலைமுறையாக அரசியல் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். காமராஜர் காலத்தில் தமிழக முதல்வராக இருந்தவர் தமது பாட்டனார் பக்தவச்சலம் என்று நினைவுகூர்ந்த அவர், அவரது காலத்திலிருந்து தமது குடும்பம் காங்கிரசில் இருந்து வருவதாக குறிப்பிட்டார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உணர்வுடன் முழுமையாக பணியாற்றியதாக தெரிவித்த அவர், சட்டத்திற்கு புறம்பாக தாம் பணியாற்றவில்லை எனவும் குறிப்பிட்டார்.
 
மேலும் பேசிய அவர் 30 ஆண்டுகளாக காங்கிரஸில் தாம் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்து பணியாற்ற காங்கிரஸ் தமக்கு வாய்ப்பளித்ததையும் பேட்டியில் குறிப்பிட்டார். தமக்கு பணியாற்ற வாய்ப்பு தந்த காங்கிரஸ் கட்சிக்கு நன்றி கடன்பட்டுள்ளதாக தெரிவித்தார். அர்பணிப்பு உணர்வுடன் தாம் பணியாற்றியதாகவும் விளக்கமளித்தார்.

இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி வழியில் சுற்றுச்சூழல் அமைச்சராக தாம் பணியாற்றியதாகவும் கூறினார். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதே இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியின் விருப்பமாக இருந்ததாக தெரிவித்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உணர்வுடன் முழுமையாக பணியாற்றியதாக தெரிவித்த அவர், சட்டத்திற்கு புறம்பாக தாம் பணியாற்றவில்லை எனவும் குறிப்பிட்டார்.
 
பெரும் முதலீடு கொண்ட திட்டங்களுக்கு அனுமதி மறுத்தது ஏன் என்று ஜெயந்தி நடராஜன் விளக்னமளித்தார். இதுகுறித்து பேசிய அவர் ஒரு சில தொழில் திட்டங்களுக்கு அனுமதி மறுத்தது உண்மைதான் என்ற அவர், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார். தமது முடிவுகளை அமைச்சரவை சகாக்கள் பலர் எதிர்த்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் கடந்த 2013 டிசம்பரில் பிரதமர் மன்மோகன் அழைத்து தம்மை பதவி விலக உத்தரவிட்டதாகவும், உத்தரவையடுத்து அரை மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்ததாகவும் குறிப்பிட்டார்.
 
பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தம்மை குறிவைத்து கடுமையாக விமர்சனம் எழுந்ததாக கூறிய அவர், தம் மீது கூறப்பட்ட எந்த புகாரும் நிரூபிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பிறகு கட்சிப் பணியிலும் தாம் ஓரங்கட்டப்பதாக வேதனை தெரிவித்தார். தாம் ஓரங்கட்டப்பட்டது ஏன் என்று கட்சி தலைமை எந்த விளக்கத்தையும் அளிக்க முன்வரவில்லை என்று தெரிவித்தார்.
 
தற்போதைக்கு தாம் எந்தக் கட்சியிலும் சேரும் திட்டமில்லை என ஜெயந்தி நடராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டாக கட்சி தலைமையை சந்திக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததாக தெரிவித்தார்.
 
தேர்தலின் போது தம்மை ஜெயந்தி வரி என்று பிரதமர் மோடி விமர்சித்ததை குறிப்பிட்ட அவர், தற்போது பிரதமராக இருக்கும் மோடி அன்றைய கோப்புகளை ஆராய தடை இல்லை என்று குறிப்பிட்டார். சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த போது அனுமதி மறுத்ததற்கான காரணம் பற்றி மோடி விசாரித்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சராக இருந்தபோது தாம் எந்த ஊழலும் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் அறிவுரைப்படியே தாம் பணிபுரிந்ததாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் தாம் தவறு செய்திருந்தால் தம்மை தூக்கில் போடட்டும் என்று ஆவேசமாக கூறினார்.