செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 19 மே 2015 (19:27 IST)

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்பு போடும் முதல் கையெழுத்து?

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மே 23 ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
 

 
சொத்துக்குவிப்பு வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 100 கோடி அபராதமும் விதித்தது. ஆனால், அவரை உச்ச நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது.
 
இதனையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு உயர் நீதிமன்றம் மே 11 ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 4 வருட சிறைதண்டனையைும், ரூ. 100 கோடி அபராதத்தையும் ரத்து செய்தது. மேலும், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரன் ஆகியோர் நிரபராதி என தீர்ப்பளித்தது. இதனால் அன்று முதல் தமிழகம் முழுக்க அதிமுகவினர் இனிப்புகள் வழங்கியும், கோயிலில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
 
இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சராக பதவியேற்பார் என்று அதிமுகவினர் மிருந்த ஆவலோடு  எதிர்பார்த்து காத்துள்ளனர்.
 
இந்நிலையில், மே 22 ஆம் தேதி காலை 7 மணிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.
 
மேலும் அடுத்த பக்கம்..

அந்த கூட்டத்தில் சட்டமன்றக் கட்சி தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதற்கான கடிதத்தை, அன்றைய தினமே தமிழக ஆளுநரிடம் கொடுக்கப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மே 23 ஆம் தேதி பகல் 11 மணியளவில் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் பதவியேற்க உள்ளார். இதற்கான விழாவை, சென்னை பல்கலைக்கழகத்தில் மிகப் பிரம்மாண்ட அளவில் கொண்டாட உள்ளார்களாம்.
 
இதற்காக, இப்போது முதலே, கூட்டணிக் கட்சி தலைவர்கள் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு, அவர்களுக்கு பாஸ் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. அதே போல, தேசிய அளவில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றதாம்.
 
இந்த விழாவில், துக்ளக் ஆசிரியர் சோ, டெல்லி மூத்த வழக்கறிஞர் பாலிநரிமன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்காக வாதாடிய குமார், செந்தில் உள்ளிட்ட வழக்கறிஞர்களும் கலந்து கொள்வார்களாம்.
 
மேலும், டெல்லியில் இருந்து பாஜகவில் இருந்து மிக மூத்த தலைவர்களில் ஒருவர் வந்து, இந்த விழாவில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு இருப்பதாக தமிழக பாஜக வட்டாரத்தில் இருந்து தகவல் கசிகின்றது.
 
ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்ற பின்பு,  மே 24 ஆம் தேதி மாலை 3 முதல் 4 மணிக்கு சென்னை தலைமைச் செயலகம் வர உள்ளார். அங்கு அவர்  மிக முக்கியமான பொது மக்கள் நலன் சார்ந்த கையெழுத்து போட உள்ளாராம். அது டாஸ்மாக் கடையை மூட உள்ளதாக அறிவிப்பு வெளியாகலாம் அல்லது டாஸ்மாக் பணி நேரத்தை குறைக்கும் அளவு அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது.
 
இந்த அறிவிப்பு மூலம் மீண்டும் தமிழக பெண்கள் மற்றும் பொது மக்கள் மனதில் இடம் பிடித்துவிடலாம் என ஜெயலலிதா தரப்பு கணக்குப் போட்டு காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
 
அதற்கு முன்பாக, மே 22 ஆம் தேதி பெரியார், அண்ணா மற்றும் அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு ஜெயலலிதா மாலையணிவித்து மரியாதை செய்கிறார்.
 
ஜெயலலிதா 8 மாதத்திற்கு பின் போயஸ் கார்டனை விட்டு வெளியே வந்து மக்களை சந்திக்க உள்ளதால், அதிமுகவினரும், அவரது ஆதரவளர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.