வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 26 மே 2016 (10:46 IST)

’உங்களுக்கு நன்றி’ - அவசரச் சட்டம் தொடர்பாக மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க அவசரச் சட்டம் கொண்டு வந்ததற்காக உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 

 
இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதில் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க அவசரச் சட்டம் கொண்டு வந்ததற்காக உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் நடப்பாண்டு மருத்துவ படிப்புக்கு முயற்சி செய்து வரும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு நிம்மதி கிடைத்துள்ளது.
 
மத்திய அரசின் அவசரச் சட்டம் தற்காலிக தீர்வாக உள்ளது. இதில் தமிழகத்தின் நிலை மற்ற மாநிலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.நான் இதற்கு முன்பு உங்களுக்கு பல தடவை எழுதிய கடிதங்களில், தமிழ் நாட்டில் 2005ம் ஆண்டு முதல் மருத்துவ கல்லூரி அனுமதிக்கான நடைமுறையை ஒழுங்குப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளேன்.
 
மருத்துவப் படிப்பு தொடர்பாக மிகவும் கவனமுடன் ஆய்வுகள் செய்த பிறகே தமிழக அரசு நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்தது. அதன் பிறகு மருத்துவப் படிப்பு அனுமதிக்கு 2006–ல் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது.அந்த சட்டத்துக்கு சட்டப் பிரிவு 254 (2)ன் கீழ் ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மாணவர்கள் மற்றும் நலிந்த சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் மத்திய கல்வி வாரியம் மூலம் நாடெங்கும் மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்பது மாநில அரசின் உரிமையை பறிப்பது போன்றதாகும். மேலும் தமிழ்நாட்டில் மிக சிறப்பாக வெளிப்படையாக நடந்து வரும் மருத்துவ தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
 
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பொது நுழைவுத் தேர்வு நகர்ப்புற மாணவர்களுக்கு சாதகமானது. அவர்களுடன் போட்டியிட இயலாத கிராமப்புற மாணவர்களையும், சமூக பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள ஏழை– எளிய மாணவர்களையும் பாதுகாக்க எனது தலைமையிலான அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
 
கிராமப் பகுதிகளில் வாழும் மாணவ - மாணவிகள், நகர்ப்புற மாணவர்கள் பெறுவது போன்ற உயர் பயிற்சிகளை பெற எந்த வாய்ப்பும் இல்லாமல் உள்ளனர். அத்தகைய கிராமப்புற மாணவர்கள், தமிழக அரசு பொது நுழைவுத் தேர்வை அழித்ததால் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள்.
 
மருத்துவ மேற்படிப்பை பொறுத்தவரை கிராமப் பகுதிகளிலும், மலை வாழ் மக்கள் உள்ள பகுதிகளிலும் சேவை புரிய உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாய்ப்பு வழங்கப்படுகிறது.
 
இது அரசு மருத்துவமனைகளில் தேவைப்படும் டாக்டர்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ள உதவியாக உள்ளது.இந்த நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பொது நுழைவுத் தேர்வு மாநில அரசின் கொள்கைகள் மற்றும் சமூக – பொருளாதார ரீதியிலான திட்டங்களை அமல்படுத்துவதை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.
 
மேலும் தேசிய அளவிலான போட்டி என்பது நடைமுறைக்கு உகந்ததல்ல.எனவே தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் தற்போதைய வெளிப்படையான தேர்வு முறை நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் எதிர்காலத்திலும் மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த தமிழகத்தை கட்டாயப்படுத்தக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்” தெரிவித்துள்ளார்.