1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: புதன், 30 ஜூலை 2014 (17:28 IST)

தமிழகத்தில் புதிதாக 128 தொடக்கப் பள்ளிகள், 5 உண்டு உறைவிடப் பள்ளிகள்

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகளில், தலா ஒரு தொடக்கப் பள்ளி வீதம் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என்றும் 5 உண்டு உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
தமிழகச் சட்டப் பேரவையில் 2014 ஜூலை 30 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ் அவர் அறிவித்ததாவது-
 
செல்வத்துள் பெரும் செல்வம் ஆகிய கல்வியை அனைவரும் கற்று, கல்லாதவர்களே இல்லாத மாநிலம் தமிழகம் என்ற குறிக்கோளை அடையும் வகையில் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. 
 
இதன் அடிப்படையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 
 
கல்வியின் அடித்தளமாக விளங்குவது தொடக்கக் கல்வி என்பதைக் கருத்தில் கொண்டு, நடப்புக் கல்வியாண்டில், 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதிகளில், தலா ஒரு தொடக்கப் பள்ளி வீதம் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இவ்வாறாக தொடங்கப்படும் தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவு சமைப்பதற்குத் தேவையான நவீன சமையலறை, குடிநீர் வசதியுடன் கூடிய கட்டடங்கள் மற்றும் கழிப்பிடங்கள் ஆகியவை ஏற்படுத்தித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு தோராயமாக 19 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். 
 
5 உண்டு உறைவிடப் பள்ளிகள்
 
தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், நடப்பாண்டில், 500 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 5 உண்டு உறைவிடப் பள்ளிகள் நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பள்ளிகளுக்கு 5 முழு நேர ஆசிரியர்கள் மற்றும் 3 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்கென ஆண்டொன்றுக்கு 3 கோடியே 74 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும். 
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.