1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Updated : வியாழன், 31 ஜூலை 2014 (19:49 IST)

தமிழகத்தில் 1,200 புதிய பேருந்துகள், சென்னையில் 100 புதிய சிற்றுந்துகள்

தமிழகத்தில் 2014–2015ஆம் ஆண்டில் 1,200 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றும் சென்னை மாநகரில் உள்ள, பல்வேறு வழித் தடங்களில் 100 புதிய சிற்றுந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ், 2014 ஜூலை 31 அன்று, முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்ததாவது:
 
சமூக - பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் போக்குவரத்துச் சேவையினையும், போக்குவரத்து சேவையினை செவ்வனே புரிந்து வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் மேம்பாட்டினையும் உயர்த்தும் உன்னதமான திட்டங்களை எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. 
 
தமிழகத்திலுள்ள அரசு போக்குவரத்துக் கழகங்கள் திறமையான மற்றும் தேவையான போக்குவரத்து வசதியினை பொது மக்களுக்கு வழங்குவதில் முக்கியமான பங்கினை வகிக்கின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், செயல் திறன் மற்றும் நிர்வாக மேலாண்மையில் பல்வேறு சாதனைகளை அகில இந்திய அளவில் படைத்துள்ளன. இப்போக்குவரத்துக் கழகங்கள் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சாதாரண வகைப் பேருந்துகளுடன், விரைவுப் பேருந்துகள், தாழ்தள சொகுசுப் பேருந்துகள், சொகுசுப் பேருந்துகள், அதிசொகுசுப் பேருந்துகள், அதிநவீன சொகுசுப் பேருந்துகள் மற்றும் குளிர்சாதனப் பேருந்துகள் போன்ற பல்வேறு வகைப் பேருந்துகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்பட்டு வருகின்றன. 
 
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் நாளொன்றுக்கு 91.20 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்துகளை இயக்கி அதன் மூலம் இரண்டு கோடியே பத்து லட்சம் பயணிகள், குறைந்த செலவில் நிறைவான பயணம் செய்திடும் வகையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் திறம்படச் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களால் போக்குவரத்துக் கழகங்களின் சேவை மகத்தானதாகப் போற்றப்படுகிறது. 
 
 
கடந்த மூன்று ஆண்டு காலத்தில், 1,476 புதிய வழித் தடங்கள் தொடக்கி வைக்கப்பட்டதோடு, 4,649 புதிய பேருந்துகள், 712 புனரமைக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் 107 சிற்றுந்துகள் வாங்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. தமிழகப் போக்குவரத்துத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மாநிலம் முழுவதும் 20,684 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 
 
இந்நிலையில், தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை நவீனப்படுத்தும் வகையில், பல ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகளை இயக்க, எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 2014–2015ஆம் ஆண்டில், 253 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 1,200 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
மேலும்
நான் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு வழங்காமையால், நீதிமன்றங்களால் ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகளை மீட்பதற்காக 38 கோடியே 91 லட்சம் ரூபாயினை அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு எனது தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. 23.7.2014 அன்று போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மாண்புமிகு உறுப்பினர்கள் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நீதிமன்றங்களால் ஜப்தி செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டிப் பேசினார்கள். 
 
இது குறித்து அரசு உயர் அதிகாரிகளிடம் விவாதித்ததில், விபத்துக்கான இழப்பீட்டுத் தொகையான 39 கோடியே 73 லட்சம் ரூபாயினை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் செலுத்தாததால் 544 அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த 544 அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை மீட்கும் வகையில், 39 கோடியே 73 லட்சம் ரூபாயினை அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழிவகை முன்பணமாக எனது தலைமையிலான அரசு வழங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
சென்னை மாநகர மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், போக்குவரத்து இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை இணைக்கும் வகையில் 100 சிற்றுந்துகள் வாங்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு சென்னை மாநகர மக்களிடையே ஏகோபித்த வரவேற்பு இருப்பதைக் கருத்தில் கொண்டும், பெருகி வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டும், மேலும் 100 புதிய சிற்றுந்துகள் 16 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டு, சென்னை மாநகரில் உள்ள, பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்படும் என்பதைப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
மாவட்ட தலைநகரங்களுக்கு இணையாக சில மாவட்டங்களின் இதர பகுதிகளில் மக்கள் தொகை, தொழில் வளர்ச்சி, வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவை அதிகரித்துள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள், ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம், புதிய வாகனம் பதிவு செய்தல் போன்ற பணிகளுக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்குச் செல்ல 15 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய வேண்டி உள்ளது. இதனைக் களையும் வகையில், 2 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில், மண்மங்கலம், உசிலம்பட்டி, திருத்தணி மற்றும் செய்யார் ஆகிய பகுதிகளில் புதிய பகுதி அலுவலகங்கள் உருவாக்கப்படும் என்பதையும், சிதம்பரம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய இடங்களில் உள்ள பகுதி அலுவலகங்கள், 1 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களாகத் தரம் உயர்த்தப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள், பொதுமக்கள் நெரிசலின்றி, குறித்த நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் சென்றடையவும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வெகு விரைவில் சென்று வரவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.