வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: புதன், 30 ஜூலை 2014 (18:25 IST)

தமிழகத்தில் 192 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்; 1426 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்

தமிழகத்தில் மொத்தம் 192 பள்ளிகளை, நடுநிலைப் பள்ளிகளாகவும் உயர்நிலைப் பள்ளிகளாகவும் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிதாக, 1426 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
 
தமிழகச் சட்டப் பேரவையில் 2014 ஜூலை 30 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ் அவர் அறிவித்ததாவது:
 
2009 ஆம் ஆண்டைய குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஒரு நடுநிலைப் பள்ளி அமைக்கப்பட வேண்டும். அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் 65 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுவதோடு, ஒவ்வொரு பள்ளிக்கும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு 9 கோடியே 28 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும். 
 
கடந்த மூன்று ஆண்டுகளில், 760 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதன் காரணமாக, சுமார் 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் அடைந்துள்ளனர். நடப்புக் கல்வியாண்டில், 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். 
 
கடந்த மூன்று ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டன. நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய 5 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையை மாற்றி, கூடுதலாக தமிழ், வரலாறு, பொருளாதாரம் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கும் சேர்த்து 9 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்பதையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென ஆண்டொன்றுக்கு 31 கோடியே 82 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும். 
 
எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள், கல்லாதோர் இல்லாத மாநிலம் தமிழகம் என்ற இலக்கை அடைய வழி வகுக்கும்.
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.