வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 29 செப்டம்பர் 2014 (16:35 IST)

ஜெயலலிதா உடல்நிலை திருப்திகரமாக உள்ளது - சிறை மருத்துவர்கள்

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு உடல்நிலை நன்கு திருப்திகரமாக இருப்பதாக சிறை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதித்தது. இதையடுத்து ஜெயலலிதா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில், 23 ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கைதி எண்.7402 வழங்கப்பட்டுள்ளது.
 
நேற்று காலை அவர், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் குடித்துவிட்டு நடை பயிற்சி மேற்கொண்டார். அதன் பிறகு, அவரது உதவியாளர் வெளியில் இருந்து வாங்கி வந்த இட்லி-வடையை சாப்பிட்டார். மதியம் உணவு சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுத்த ஜெயலலிதா சற்று சோர்வாக காணப்பட்டார்.
 
நேற்று மாலை ஜெயலலிதாவுக்கு திடீரென சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சிறை ஊழியர்களிடம் தனக்கு சர்க்கரை அளவு அதிகரித்து விட்டது, கண் பார்வை மங்குகிறது என்று கூறியிருக்கிறார். இதையடுத்து உடனடியாக சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு ஜெயலலிதா அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அங்கு, அவருக்கு சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது. பிறகு டாக்டர்கள், ஜெயலலிதா உடல்நிலை நன்கு திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
 
இதையடுத்து, சிகிச்சை பெற்ற சிறிது நேரத்தில் ஜெயலலிதா மீண்டும் அவரது அறைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். இதற்கிடையே சசிகலா தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதால் அவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அதேநேரம், இளவரசியும் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூற அவரும் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்.
 
அவர்கள், தங்களுக்கு புதிய வகை உணவு ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறியதையடுத்து, அவர்களுக்கு பப்பாளி, எலுமிச்சை மற்றும் பழ வகைகள், பால் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மூவரும் பழ வகைகளை மட்டுமே சாப்பிட்டுள்ளனர்.
 
இன்று ஜெயலலிதா, காலை 5.30 மணிக்கு எழுந்து நடைபயிற்சி முடித்திருக்கிறார். அதன்பின் அவர், வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட உணவை சாப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவை சந்தித்து பேச இன்று நிறைய பேர் மனு கொடுத்திருந்தனர். ஆனால், எல்லாரையும் ஜெயலலிதா சந்திக்கவில்லை. முதலில் அவர், அதிமுக வழக்கறிஞர்களை சந்தித்து பேசினார். ஜாமீன் மனு தாக்கல் செய்வது குறித்து அவர்களுடன் விவாதித்தார்.
 
ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள அறை முன்பு பாதுகாப்புக்காக பெண் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவுக்கு பெண் கைதிகள் அணியும் வெள்ளை நிற சேலை வழங்கப்பட்டது. ஆனால் அந்த சேலையை ஜெயலலிதா அணியவில்லை. வி.ஐ.பி. என்பதால் இதை அவரது முடிவுக்கே சிறைத்துறை அதிகாரிகள் விட்டுவிட்டனர்.
 
ஜெயலலிதா பயன்படுத்த உடைகள் மற்றும் தேவையானப் பொருட்கள் ஒரு வேனில் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வேன், பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்குள் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் இருந்து தனக்கு தேவையானவற்றை ஜெயலலிதா எடுத்து பயன்படுத்தி வருகிறார்.
 
ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள அறை 12க்கு 18 அடி சுற்றளவு கொண்டது. அதில், நாற்காலிகள், பிரிட்ஜ், டி.வி. வசதி செய்யப்பட்டுள்ளது. பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் 2,100 பேர் வரை தான் அடைத்து வைக்க வசதி உள்ளது. ஆனால் தற்போது, அங்கு 4,200 பேர் வரை அடைக்கப்பட்டுள்ளனர்.