1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2015 (16:04 IST)

தமிழக மக்களின் மறதியை சாதகமாக்கி ஏமாற்றுவதில் ஜெயலலிதாவிற்கு முதலிடம் - விஜயகாந்த்

தமிழக மக்களின் மறதியையும், அவர்களின் பெருந்தன்மையையும் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, மக்களை ஏமாற்றுகின்ற அரசியல்வாதிகளில் முதலிடத்தில் இருப்பவர் ஜெயலலிதா தேமுதிக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக மக்களின் மறதியையும், அவர்களின் பெருந்தன்மையையும் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, மக்களை ஏமாற்றுகின்ற அரசியல்வாதிகளில் முதலிடத்தில் இருப்பவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆவார்.
 
கடந்த மாதத்தில் ஆயிரம்கோடி ரூபாய் மதிப்புள்ள வணிகவளாக திரையரங்குகளை அவருடன் இருக்கும் அவரது தோழி வி.கே.சசிகலாவும், அவரது உறவினர்களும் வாங்கியது குறித்து கடந்த (01.11.2015) தேதியில் அறிக்கை ஒன்றை நான் வெளியிட்டிருந்தேன். 
 
தற்போது “மிடாஸ் முதல் ஃபீனிக்ஸ் வரை”, கணக்கில்லா கம்பெனிகள், குவியும் சொத்துக்கள் என்ற தலைப்பிலும், “தானாக சிக்கும் கார்டன் டீம்” என்ற தலைப்பிலும் வார இதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. வணிகவளாக திரையரங்கை வாங்கிய ஜாஸ் சினிமா நிறுவனம் மட்டுமல்ல, நிதி நிறுவனம், மதுபான கம்பெனி, ரியல் எஸ்டேட் நிறுவனம், விமான கம்பெனி உள்ளிட்ட பல நிறுவனங்கள் குறித்த பட்டியலை அந்த வார இதழ்கள் வெளியிட்டுள்ளன. 
 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், உடன் பிறவா சகோதரியுமான வி.கே.சசிகலாவின் உறவினர்களே இந்த நிறுவனங்களுக்கு பங்குதாரர்களாக இருக்கிறார்கள் என்பதையும், அவர்களின் உறவு முறை குறித்த வரைபடத்தையே வார இதழ்கள் வெளியிட்டுள்ளன.
 
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி இவர்கள் ஜெயலிதாவுடன் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. பெரும்பாலான கம்பெனிகள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முகவரியை மட்டுமே வைத்து பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. 
 
இவ்வளவு துல்லியமாகவும், விளக்கமாகவும் வார இதழ்கள் தெரிவித்த பிறகும்கூட, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவோ, அவரது தோழி வி.கே.சசிகலாவோ இதுவரையிலும் வாய்மூடி மௌனமாக இருப்பது ஏன்? தொட்டதற்கெல்லாம் எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்லி, அவதூறு வழக்குகளை போடுகின்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இது குறித்து வாய்திறக்க மறுப்பது ஏன்? 
 
இதிலுள்ள அனைத்தும் உண்மையாக இருப்பதனாலா? இல்லை உண்மையைத்தானே சொல்கிறார்கள் சொல்லிவிட்டு போகட்டும் என்கிற எண்ணமா? இல்லை இதுகுறித்து பேசப்போய் “கிணறு வெட்ட, பூதம் புறப்பட்ட கதையாகிப்போய்விடுமோ” என்கின்ற அச்சமா? எப்படியாயினும் தமிழக மக்களுக்கு இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இருக்கிறது. 
 
ஏனென்றால் தனக்கிருக்கும் நட்பு, உறவு என அனைத்துமே சசிகலா மட்டுமே என்றும், தனக்கு ஆதரவாகவும், தேவையான உதவிகளை செய்பவராகவும் என்னுடனேயே சசிகலா இருக்கிறார். எனக்காகவே பல தியாகங்களை செய்துள்ளார் என பலமுறை சசிகலா குறித்து ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே ஜெயலலிதா பதிலளிக்கவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 
 
மேலும் இந்த நிறுவனங்களை துவக்க எங்கிருந்து, எப்படி, கோடிக்கணக்கான ரூபாய் பணம் வந்தது, அது யாருடைய பணம், அதற்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்பது குறித்த விரிவான விளக்கத்தை அளிக்காவிட்டால் ஏற்கனவே நான் கூறியதுபோல் 1996ல் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட தோல்வியைப்போல், 2016 தேர்தலிலும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
 
வேளச்சேரி பீனிக்ஸ் வணிகவளாகத்தில் உள்ள 11 திரையரங்குகளுக்கு, இரண்டு ஆண்டுகாலமாக உரிமம் வழங்காமல் இழுத்தடித்ததன் விளைவே, அந்த திரையரங்குகள் ஜாஸ் சினிமா நிறுவனத்திற்கு கைமாறியது. ஜாஸ் சினிமா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்தவுடன் எவ்வித தடையும் இன்றி 11 திரையரங்குகளுக்கும் உடனடியாக உரிமம் வழங்கப்பட்டது. அதோடு இந்த வணிக வளாகங்களில் ஒரு டிக்கெட் சுமார் 300 ரூபாய்க்கும் மேல் அநியாயமாக விற்கப்படுகிறது. 
 
அதேபோல் வேளச்சேரி கிராண்ட் வணிகவளாகத்தில் உள்ள ஐந்து திரையரங்குகளுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகாலமாக உரிமம் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டது. தற்போது உயர்நீதிமன்றம் ஒருமாதத்தில் தீர்வு காணவேண்டுமென அதிமுக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
ஐமேக்ஸ் வளாகத்தில் உள்ள ஒன்பது திரையரங்குகளுக்கும்  உரிமம் வழங்காமல் இழுத்தடிப்பதாகவும், அதுகுறித்து அந்த  நிறுவனம் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இப்படியெல்லாம் இழுத்தடித்து, அதிகரிகார துஷ்பிரயோகத்தின் மூலம், அந்த திரையரங்குகளையும் ஜாஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக்கிக்கொள்ளச் செய்யும் முயற்சியோ? இது என பொதுமக்கள் கருதுகிறார்கள். 
 
1991 முதல் 1996 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் அதிகார பலத்தைக் கொண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்து, அதன்மூலம் சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி, நான்காண்டுகள் சிறைத்தண்டனையும், 100கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதை மறந்துவிட்டார்களா? இல்லை, “தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போய்விட்டதென்று” நினைத்துவிட்டர்களா? இல்லை, உச்சநீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை மறந்துவிட்டு, 2011 முதல் 2016 வரை நடைபெறும் அதிமுக ஆட்சியில், மீண்டும் ஒரு சொத்துக்குவிப்பு வழக்கை எதிர்கொள்ளத் தயாராகிறார்களா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
 
எனவே இதுகுறித்து மக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்க மாநில அரசு தவறும் பட்சத்தில் மத்திய அரசின் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும், புலனாய்வுப் பிரிவும் விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுத்து, தமிழக மக்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.