வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Updated : வியாழன், 10 ஜூலை 2014 (18:14 IST)

நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடம் & உடற்பயிற்சிக் கூடங்கள் - ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, 2014 ஜூலை 10 அன்று தலைமைச் செயலகத்தில், 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தைத் திறந்து வைத்து, தலைமைச் செயலகப் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 50 லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடங்களையும் திறந்து வைத்தார். 

 
சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடம் பொதுப் பணித் துறையால் தரைத் தளத்துடன் கூடிய 10 அடுக்கு மாடிகள் கொண்ட கட்டடமாகக் கட்டப்பட்டது. 28 கோடி ரூபாய் செலவில் இக்கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணிக்கு ஜெயலலிதா 3.3.2012 அன்று அடிக்கல் நாட்டினார். 
 
அதன்படி, சென்னை, தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் தற்போதைய கட்டட முகப்பு, கட்டடக் கலை வல்லுநர் குழுவினரால், புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றியுள்ள சரித்திரப் புகழ்மிக்க கட்டடக் கலையினைச் சார்ந்திருக்கும் வகையில், பாரம்பரியத் தோற்றத்தோடு நவீனக் கட்டடக் கலை நுணுக்கங்களை உள்ளடக்கியதாகவும், உயர்தர கட்டுமானத்துடன், அழகாகவும், கம்பீரமாகவும் காட்சியளிக்கக் கூடிய வகையிலும் வடிவமைத்துக் கட்டப்பட்டுள்ளது. 
 
நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டட முகப்புத் தோற்ற மேம்பாட்டுக் கட்டுமானப் பணிக்கு 14 கோடியே 50 லட்சம் ரூபாய், மின் கட்டுமானப் பணிக்கு 13 கோடியே 50 லட்சம் ரூபாய், என மொத்தம் 28 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தில், 3540 சதுர மீட்டர் அளவில் சூரிய வெப்பம் ஊடுருவதைத் தடுத்து, அதே சமயம் அதிக வெளிச்சம் ஊடுருவும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட கண்ணாடிகள் மற்றும் மின்சாரத்தைச் சேமித்திட கட்டடத்தின் உட்பகுதிகளில் மின்சேமிப்பு விளக்குகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. 
 
மேலும், அலுவலர்கள் தங்கள் பணியினை மாசற்ற சுற்றுச் சூழலில் செவ்வனே செய்திட, நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடம் முழுமைக்கும், 1500 டன் திறன் கொண்ட மையக் குளிரூட்டும் வசதி செய்யப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் முன் பகுதியில் வண்ண மின்விளக்குகளுடன் கூடிய நீரூற்று, 1700 சதுர மீட்டர் பரப்பளவில் அழகிய புல்வெளி, கட்டடத்தின் நுழைவு வாயில் மற்றும் மின்தூக்கிகள் அருகில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட தரை, கட்டடத்தின் பிரதான வாயிலில் நேர்த்தியான வடிவமைப்புடன் கூடிய கண்ணாடி பொருத்திய கதவு, கட்டடத்தின் முகப்புப் பகுதி முழுவதிலும் சிறப்பு வர்ணப் பூச்சு, கட்டடத்தினைச் சுற்றி மேம்படுத்தப்பட்ட சாலைகள், நடைமேடைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 

சென்னை, தலைமைச் செயலகத்தில், புதிய எழிலார்ந்த முகப்புத் தோற்றத்துடன், மையக் குளிர்சாதன வசதிகளோடு, சிறப்புத் தொழில் நுட்பத்துடன் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தை ஜெயலலிதா இன்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். அப்போது, புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தின் புகைப்படங்களைப் பார்வையிட்டார். 
 
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் சுமார் 6000 ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பணி புரிந்து வருகிறார்கள். அவர்கள் தொடர்ந்து பல மணி நேரம் இருக்கையிலேயே அமர்ந்து பணி புரிய வேண்டிய சூழ்நிலை உள்ளது. தலைமைச் செயலக ஊழியர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால், பணிகளை விரைவாகவும், குறித்த காலத்திலும் செய்து முடிக்க இயலும் என்பதோடு, அவர்களின் பணித் திறனும் அதிகரிக்கும். எனவே, அரசு ஊழியர்களின் உடல் நலத்தைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித் தனியே அனைத்து வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி கூடம் 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று ஜெயலலிதா 14.5.2013 அன்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார். 
 
அதன்படி, தலைமைச் செயலகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித் தனியே அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடங்களில், உடற்பயிற்சிக்குத் தேவையான 5 ஓடுபொறிகள் (Treadmill), 3 நீளவட்ட இயந்திரங்கள் (Elliptical), 2 உடற்பயிற்சி மிதிவண்டிகள் (Recumbent Bike), கால்களை நீட்டி மடக்கி செய்யும் 3 பயிற்சி சாதனங்கள் (Leg Curl and Leg Extension), கால்களை பதித்து மிதிக்கும் சாதனம் (Dual Leg Press / Calf Raise), அமர்ந்தபடி முழங்கால் உயர்த்தும் 2 பயிற்சி சாதனங்கள் (Seated Calf Raise), அமர்ந்தபடி முன் பின் இழுக்கும் 2 பயிற்சி சாதனங்கள்  (Lat pull Down & Vertical Row), பல்முனை வலுப்படுத்தும் 2 பயிற்சி சாதனங்கள் (Multi press), பல்நோக்கு பயிற்சி மேசை (Multi Bench - All in one), இடுப்பை வலுப்படுத்தும் 2 பயிற்சி சாதனங்கள் (Abdominal / Lower Back), தசையை வலுப்படுத்தும் சாதனம் (Smith Machine), ஒலிம்பிக் பளூதூக்கும் 2 பயிற்சி சாதனங்கள் (Olympic Weightlifting Challenge Revolving Set) என 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 29 உடற்பயிற்சி சாதனங்கள், 
 
மேலும் 25 லட்சம் ரூபாய் செலவில் குளிர்சாதன வசதி, கண்காணிப்பு கேமரா, ஓய்வு அறை, கழிப்பறை, உடை மாற்றும் அறை, மரத்தட்டு தரைத் தளம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன், மொத்தம் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த உடற்பயிற்சிக் கூடங்கள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன. 
 
தலைமைச் செயலக ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடங்களை ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார். அப்போது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடங்களைப் பார்வையிட்டு, அங்கு நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கருவிகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, பயிற்சியாளர்களிடம் உடற்பயிற்சிக் கூடத்தினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினார். 
 
இந்த நிகழ்ச்சியில், நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தரராஜ், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., (ஓய்வு), பொதுத் துறை முதன்மைச் செயலாளர் யத்தீந்திர நாத் ஸ்வேன், இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசீமுத்தின், இ.ஆ.ப., பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் எம். சாய்குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் எஸ். பீட்டர் அந்தோணிசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.