வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: புதன், 9 ஜூலை 2014 (16:08 IST)

சென்னையில் விவேகானந்தர் பண்பாட்டு மையம் - ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, 8.7.2014 அன்று தலைமைச் செயலகத்தில், சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்ல வளாகத்தில், தமிழ்நாடு அரசின் நிதி உதவியோடு ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் நிர்வாகத்தின் சார்பில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விவேகானந்தர் பண்பாட்டு மையத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். 

 
சுவாமி விவேகானந்தரால் துவக்கப்பட்ட ராமகிருஷ்ண மடம், மிகச் சிறந்த மக்கள் சேவையை, நாட்டுப் பணியை, ஆன்மீகப் பணியை ஆற்றி வருகிறது. ராமகிருஷ்ண மடத்தின் மக்கள் சேவையையும், சமூகப் பணிகளையும் கருத்தில் கொண்டு, அரசுக்குச் சொந்தமான விவேகானந்தர் இல்லம் அமைந்துள்ள இடத்தினையும், அதன் அருகில் காலியாக உள்ள நிலத்தையும் நீண்ட காலக் குத்தகை அடிப்படையில் அளிக்குமாறு அதன் நிர்வாகிகள் விடுத்த வேண்டுகோளினை ஜெயலலிதா உடனடியாக ஏற்று, 99 ஆண்டு காலக் குத்தகை அடிப்படையில், மிகக் குறைந்த வாடகையில் விவேகானந்தர் இல்லத்தையும், அதை ஒட்டியுள்ள காலி நிலத்தினையும் ராமகிருஷ்ண மடத்திற்கு அளித்தார். 
 
மேலும், சென்னை, விவேகானந்தர் இல்லத்தில் 27.2.2013 அன்று நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த ஆண்டு விழாவினை ஜெயலலிதா துவக்கி வைத்து, சுவாமி விவேகானந்தர் பண்பாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டி, ‘விவேகஜோதி’ தீபம் ஏற்றி வைத்து, சுவாமி விவேகானந்தர் அவர்களின் புகைப்படத் தொகுப்பு நூலை வெளியிட்டு, தேசிய இளைஞர் தினப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கி ஆற்றிய சிறப்புரையில், சுவாமி விவேகானந்தர் பண்பாட்டு மையத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். 
 
அதன்படி, ஜெயலலிதா, 27.2.2013 அன்றே சுவாமி விவேகானந்தர் பண்பாட்டு மையம் கட்டுவதற்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டார். சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த ஆண்டு விழாவினையொட்டி 8000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள விவேகானந்தர் பண்பாட்டு மையத்தில் 
கணினி நூலகம், புத்தக விற்பனை நிலையம் ஆகியவை செயல்படுவதோடு இங்கு ஆளுமை வளர்ச்சியை மேம்படுத்திட தியானம், ஆக்கபூர்வமான சிந்தனை, நேர மேலாண்மை ஆகியவை பற்றிச் சொற்பொழிவுகள், இளைஞர் சக்தி மேம்பாட்டிற்காக வேலை வாய்ப்பு அறிவுரைகள், மேற்படிப்பு ஆலோசனை, சுய வேலைவாய்ப்பு, தீய பழக்கங்களிலிருந்து விடுபட ஆலோசனை ஆகியவையும்; தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிப் பாடங்களைப் பயிற்றுவித்தல்; மதம், பண்பாடு, சரித்திரம், சமூகவியல் தொடர்பான ஆய்வுகள், கலாச்சாரம், சமூகப் பணி, நிர்வாகம் தொடர்பான கருத்தரங்குகள், தொழிற் பயிற்சி போன்ற பல்வேறு பண்பாட்டு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். 
 
சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்ல வளாகத்தில் தமிழ்நாடு அரசின் நிதி உதவியோடு ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் நிர்வாகத்தின் சார்பில் 8000 சதுர அடி பரப்பளவில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விவேகானந்தர் பண்பாட்டு மையத்தை ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். 
 
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., (ஓய்வு), ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் சுவாமி ஆசுதோஷானந்தா, சுவாமி சுகதேவானந்தா, சுவாமி விமூர்த்தானந்தா, சுவாமி தர்மிஷ்டானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.