செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 18 ஜூலை 2014 (16:01 IST)

172 உதவிப் பேராசிரியர்களுக்குப் பணி நியமன ஆணை - ஜெயலலிதா வழங்கினார்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 172 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகளைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று (18.7.2014) தலைமைச் செயலகத்தில் வழங்கினார். 
 
வேளாண் கல்வியின் மூலம் உணவுப் பாதுகாப்பு, வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் ஆகிய உயரிய நோக்கோடு செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமானது, வேளாண்மைக் கல்வி, வேளாண்மை ஆராய்ச்சி, வேளாண்மை விரிவாக்கக் கல்வி, வேளாண் வணிக மேம்பாடு, மத்திய மாநில அரசுகளுக்கு வேளாண் கொள்கை வகுத்தலில் பங்களிப்பு, திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் மூலம் ஊரக இளைஞர்களின் வேளாண் கல்வித் திறனை வளர்த்தல் ஆகிய பணிகளைச் செய்து வருகிறது. 
 
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பணி தொய்வின்றி நடைபெறும் வகையிலும், வேளாண் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களின் கல்வித் தரத்தினை உறுதி செய்யும் நோக்குடனும் அப்பல்கலைக்கழகத்தில் காலியாக இருந்த உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நியமனம் செய்ய 9.9.2013 அன்று நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டு 1850 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் பரிசீலனைக்குப் பின்னர், தகுதியுள்ள 948 விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டனர். நேர்முகத் தேர்வு 21.1.2014 முதல் 13.2.2014 வரை நடைபெற்றது. அதன் அடிப்படையில், பொதுப் பிரிவைச் சார்ந்த 48 பேர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 50 பேர்கள், மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 33 பேர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 39 பேர்கள், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த 2 பேர்கள், என மொத்தம் 172 உதவிப் பேராசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இப்பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  
இவ்வாறு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தெரிவு செய்யப்பட்ட 172 பேர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 7 பேர்களுக்கு ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் உதவிப் பேராசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். மீதமுள்ள 165 பேர்களுக்கும் பணி நியமன ஆணைகள் இன்றே வழங்கப்பட்டன. 
 
இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., (ஓய்வு), வேளாண்மை துறை முதன்மைச் செயலாளர் முனைவர் சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கே. ராமசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.